Published : 26 Jul 2020 02:49 PM
Last Updated : 26 Jul 2020 02:49 PM

மறக்க முடியுமா?: ஆஸி. 50/4- என்று தடுமாறிய நிலையில் பாண்டிங் எடுத்த முதல் சதம்: இங்கி. இன்னிங்ஸ் தோல்வி

ஜூலை 26ம் தேதி இன்றைய தினத்தில் 1997ம் ஆண்டு இங்கிலாந்து லீட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங் தன் முதல் டெஸ்ட் சதத்தை அடித்ததும், மேத்யூ எலியட்டுடன் இரட்டைச் சதக் கூட்டணி அமைத்ததும் ஆஸ்திரேலியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

5மேட்ச்கள் கொண்ட ஆஷஸ் தொடரில் 4வது டெஸ்ட்டில்தான் பாண்டிங் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார், அதன் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை.

இந்த முதல் சதம் குறித்து இன்று நினைவு கூர்ந்த பாண்டிங், “என் முதல் டெஸ்ட் சதம், ஆஷஸ் தொடரில். 23 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தினத்தில் அடித்த சதம். 99 ரன்களில் இருந்த போது மிகவும் பதற்றமான தருணம், ஆனால் எதிர்முனையில் மேத்யூ எலியட் நின்றிருந்தார். அவர்தான் என்னை வழிநடத்தினார். எலியட் பிரமாதமான 199 ரன்களை எடுத்தார்” என்று தன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

லீட்ஸ் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தது. ஜேசன் கில்லஸ்பியின் பேய் பவுலிங்கில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 172 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது.

முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 50/4 என்று தடுமாறிய போது ரிக்கி பாண்டிங், மேத்யூ எலியட்டுடன் இணைந்தார், இருவரும் 268 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ரிக்கி பாண்டிங் மிக முக்கியமான இந்த இன்னிங்சில் 202 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 127 ரன்கள் எடுத்தார்.

எலியட் 199 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக டேரன் காஃப் பந்தில் க்ளீன் பவுல்டு ஆனார். ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 268 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அதாவது பாண்டிங், எலியட் சேர்ந்து எடுத்த ரன்களை இங்கிலாந்து ஒட்டுமொத்த அணியும் எடுத்து ஆல் அவுட் ஆகி 61 ரன்களில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இன்றளவும் இது பாண்டிங்கின் மிகப்பெரிய சதமாகவே பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தன் கரியரில் திரும்பிப் பார்க்காத ரன் மெஷினாகத் திகழந்த பாண்டிங் தன் சர்வதேச கரியரில் 27,486 ரன்களைக் குவித்தார்.

ஆஸ்திரேலிய அணியை சிறந்த முறையில் வழிநடத்தி 2003, 2007 உலகக்கோப்பையை வென்றார். 2012ல் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு 13,378 ரன்களுடன் 2ம் இடத்தில் இருக்கிறார்.

தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x