Last Updated : 15 Sep, 2015 10:02 AM

 

Published : 15 Sep 2015 10:02 AM
Last Updated : 15 Sep 2015 10:02 AM

அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் சாம்பியன், மகளிர் இரட்டையரில் சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு பட்டம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நடப்பாண்டில் அவர் கைப்பற்றும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இறுதிப்போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை அவர் தோற்கடித்தார். மகளிர் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா- ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

உலக தரவரிசையில் முதலிடத்தில் உல்ள ஜோகோவிச்சும், 2-வது இடத்தில் உள்ள பெடரரும் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். உலகின் இரு சிறந்த வீரர்கள் மோதும் ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக 3 மணி நேரம் வரை மழை பெய்ததால் போட்டி தாமதமாகத் தொடங்கியது.

முதல் செட்டை ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது சுற்றில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய பெடரர் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால், அடுத்த இரண்டு செட்களில் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தி அவற்றைக் கைப்பற்றினார். இதன் மூலம் 6-4, 7-5, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற ஜோகோவிச் அமெரிக்க ஓபனை 2-வது முறையாகக் கைப்பற்றினார். இதற்கு முன்பு 2011-ல் அமெரிக்க ஓபனை வென்றிருந்தார் ஜோகோவிச். ஒட்டுமொத்தமாக ஜோகோவிச்சுக்கு இது 10-வது கிராண்ட்ஸ்லாம் ஆகும்.

இதுவரை ஜோகோவிச்சும் பெடரரும் 42 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இவற்றில் இருவரும் தலா 21 போட்டிகளில் வென்று சமபலத்துடன் உள்ளனர்.

நடப்பாண்டில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 3 கிராண்ட்ஸ்லாம்களையும் ஜோகோவிச் வென்றுள்ளார். நடப்பாண்டு பிரெஞ்சு ஓபனை ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவிடம் ஜோகோவிச் இழந்தார்.

வெற்றி குறித்து பேசிய ஜோகோவிச், “ரோஜர் பெடரர் மற்றும் அவர் அளிக்கும் சவால்கள் மீது நான் அளப்பரிய மரியாதை வைத்திருக்கிறேன். அவர் எப்போதுமே மிகச்சிறந்த வீரர். வெற்றி பெறுவதற்கு நான் மிகச்சிறப்பாக விளையாட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். டென்னிஸை நான் நேசிக்கி றேன். இந்த சாதனைகள் என்னை தொடர்ந்து மேற்செல்ல தூண்டுகின்றன” என்றார்.

சானியா- ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

மகளிர் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்த ஜோடி, 4-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் கேஸி டெல்லக்காவ், கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஜோடியை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தி பட்டம் வென்றது.

சானியா-ஹிங்கிஸ் ஜோடி இந்த தொடரில் ஒரு செட்டைக் கூட இழக்காமல் பட்டம் வென்றுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு காரா பிளாக்- லிஸெல் ஹுபெர் ஜோடிக்குப் பிறகு இவ்வாறு ஒரு ஜோடி பட்டம் வெல்வது இதுவே முதல் முறை.

வெற்றி குறித்து சானியா கூறும் போது, “நடப்பாண்டு எங்களுக்கு மிகச் சிறப்பானதாக அமைந்தது. விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என அடுத்தடுத்து வென்றுள்ளோம்” என்றார். சானியா மகளிர் இரட்டையரில் வெல்லும் 2-வது கிராண்ட்ஸ்லாம் இதுவாகும்.

ஹிங்கிஸ் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பயஸுடன் இணைந்து பட்டம் வென்றிருப்பது குறிப் பிடத்தக்கது. அவருக்கு இரட்டையரில் இது 11-வது கிராண்ட்ஸ்லாம் ஆகும். ஹிங்கிஸ் கூறும்போது, “தொடக்கத்தில் இருந்தே நாங்கள் அதிரடியாக ஆடினோம். இந்த ஆட்டமுறை எங்களுக்கு கைகொடுத்தது” என்றார்.

சானியாவும் ஹிங்கிஸும் இணைந்து விளையாடிய 12 தொடர்களில் 6 தொடர்களில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வருவேன்

பெடரர் இதுவரை 5 முறை அமெரிக்க ஓபனை வென்றுள்ளார். தற்போது 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்றுள்ளார். ஆடவர் ஒற்றையரில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த 2012-ல் விம்பிள்டனை வென்ற பெடரர் அதன்பிறகு கிராண்ட்ஸ்லாம் வெல்லவில்லை. அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் 54 தவறுகளை (அன்ஃபோர்ஸ்டு) அவர் செய்தார். மேலும் 23 பிரேக் பாய்ன்ட்களில் அவரால் 4-ஐ மட்டுமே தனக்கு சாதகமாக மாற்ற முடிந்தது.

பெடரர்

தற்போது 34 வயதாகும் பெடரர் அடுத்த ஆண்டும் அமெரிக்க ஓபனில் களமிறங்குவேன் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “தற்போதைய எனது ஆட்டத்திறன் குறித்து நான் மகிழ்ச்சியே அடைகிறேன். ஒவ்வொருவரும் எனக்கு சவால் அளிக்கின்றனர். நான் டென்னிஸை நேசிக்கிறேன். அடுத்த ஆண்டு உங்களை (ரசிகர்கள்) மீண்டும் சந்திப்பேன். நோவக் போன்ற சிறந்த சாம்பியனை எதிர்த்து விளையாடுவது என்பது எப்போதும் கடினமானது” என்றார்.

மோடி, பிரணாப் வாழ்த்து

அமெரிக்க ஓபனில் பட்டம் வென்ற சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“அற்புதமான வெற்றிக்காக வாழ்த்துகள் சானியா, ஹிங்கிஸ். உங்களின் சாதனைகள் எங்களுக்கு பெருமிதம் அளிக்கிறது” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“அமெரிக்க ஓபன் மகளிர் இரட்டையரில் பட்டம் வென்றமைக்காக இதயம் கனிந்த வாழ்த்துகள் சானியா மற்றும் ஹிங்கிஸ். அற்புதம்” என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

படங்கள்: ஏஎஃப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x