Published : 20 Jul 2020 07:11 PM
Last Updated : 20 Jul 2020 07:11 PM
கரோனா ஊரடங்கு தொடங்கியது முதலே ‘இண்டோர் கேம்ஸ்’ என்று சொல்லப்படும் உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மக்கள் மத்தியில் மவுசு கூடியது. அவற்றில் ‘செஸ்’ எனப்படும் சதுரங்க விளையாட்டு முக்கிய இடத்தைப் பிடித்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற விளையாட்டுகளைவிடச் சதுரங்க விளையாட்டு சற்றே நுட்மானது. மூளைக்கும் கற்பனை ஓட்டத்துக்கும் வேலை கொடுத்து விளையாட வேண்டிய விளையாட்டு. கிட்டத்தட்ட புதிர்களுக்கு விடை காண்பது போல நுட்பத்துடன் விளையாடினால்தான் வெற்றி கிட்டும். நேரக் கட்டுப்பாடுகளுக்கு அப்பால், நகர்த்தல்களின் மூலம் முடிவு காணும் இந்த விளையாட்டை, கரோனா காலத்தில் பெரியவர்கள் முதல் இளையோர்வரை எல்லாத் தரப்பினரும் ஆசைதீர விளையாடித் தீர்த்திருப்பார்கள்.
இப்போது சதுரங்க விளையாட்டைப் பற்றி ஏன் இந்தப் புராணம் என்று நீங்கள் நினைக்கலாம். இன்று (ஜூலை 20) உலக சதுரங்க நாள். உலகின் மிகவும் பழமையான விளையாட்டு செஸ்; உலகில் அதிகமாக விளையாடப்படும் விளையாட்டு செஸ்; உத்திகளுடன் விளையாட வேண்டிய பழமையான விளையாட்டு செஸ் என இந்த விளையாட்டுக்குப் பல பெருமைகள் உள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட செஸ் விளையாட்டுக்கு ‘சதுரங்கா’ என்று பெயர். 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்துதான் உலகின் பிற நாடுகளுக்கும் இந்த விளையாட்டுப் பின்னாளில் சென்றது.
ஜூலை 20-ம் நாள் உலக சதுரங்க நாள் ஆனது எப்படி?
1924-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. அதே நாளில்தான் உலக சதுரங்கக் கூட்டமைப்பும் உருவானது. உலக சதுரங்கக் கூட்டமைப்பு உருவான ஜூலை 20-ம் தேதியை 42 ஆண்டுகள் கழித்து 1966-ம் ஆண்டில் சர்வதேசச் சதுரங்க நாளாக அந்த அமைப்பு அறிவித்தது. அப்போது முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. 2019-ம் ஆண்டில் இந்த விளையாட்டை ஐக்கிய நாடுகள் சபையும் அங்கீகரித்தது. இதற்காகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜூலை 20-ம் நாளை உலக சதுரங்க நாளாக அறிவித்தது.
பொதுவாக விளையாட்டு நாள்கள் உலகில் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால், ஒரு விளையாட்டுக்கே ஒரு நாள் தனியாகக் கடைப்பிடிக்கப்படுவது அரிதானது. சதுரங்க விளையாட்டு அந்தப் பெருமைக்குரியதாகி உள்ளது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT