Last Updated : 20 Jul, 2020 12:08 PM

 

Published : 20 Jul 2020 12:08 PM
Last Updated : 20 Jul 2020 12:08 PM

45 ரன்களுக்கு 6 விக்கெட்; வோக்ஸ், பிராட் பந்துவீச்சில் நிலைகுலைந்த மே.இ.தீவுகள்: டிராவை நோக்கிச் செல்லும் மான்செஸ்டெர் டெஸ்ட்?

மான்செஸ்டர்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் பிராட், வோக்ஸ் பந்துவீச்சில் நிலைகுலைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

227 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த மே.இ.தீவுகள் அணி, பிற்பகல் தேநீர் இடைவேளைக்குப் பின், வோக்ஸ், பிராட்டின் ஸ்விங் பந்துவீச்சில் மளமளவென 45 ரன்களில் மீதமுள்ள 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. எப்படியோ கடுமையாகப் போராடிய மே.இ.தீவுகள் வீர்கள் பாலோ-ஆன் வராமல் போராடி 287 ரன்கள் சேர்த்துத் தப்பித்தனர்.

தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் கிராளி 11 ரன்களுடனும், பட்லர் ரன் ஏதும் சேர்க்காமலும் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையுடன் சேர்த்து இங்கிலாந்து அணி 219 ரன்கள் முன்னிலையுடன் இருக்கிறது.

துணிச்சலாக முடிவு எடுக்குமா இங்கிலாந்து?

இன்று ஒருநாள் கடைசி நாள் ஆட்டம் மட்டுமே இருக்கும். ஆட்டம் பெரும்பாலும் டிராவில் முடியவே சாத்தியம் இருக்கிறது. இங்கிலாந்து அணி சில துணிச்சலான முடிவுகள் எடுத்தால் வெற்றிபெற்று இழந்த நம்பிக்கையைப் பெறலாம். அதாவது காலை தேநீர் இடைவேளைக்குள் 100 ரன்கள் வரை சேர்த்து அதன்பின் மே.இ.தீவுகள் அணிக்கு 300 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து 2-வது இன்னிங்ஸை பேட் செய்யவைக்க வேண்டும்.

இங்கிலாந்து அணியில் திறமையான வேகப் பந்துவீச்சாளர்களாக பிராட், வோக்ஸ், சாம் கரண் ஆகியோர் மூலம் விக்கெட்டை எளிதாக வீழ்த்தி வெற்றிக்கு முயலலாம். இல்லாவிட்டால் 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடியவே வாய்ப்புள்ளது.

3-வது நாள் ஆட்டம் முழுமையாக மழையால் வீணாகிப்போனதுதான் ஆட்டம் டிராவில் செல்ல முக்கியக் காரணமாகும்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சிப்லி (120), ஸ்டோக்ஸ் (176) ஆகியோரின் அபாரமான சதத்தால் 9 விக்கெட் இழப்புக்கு 489 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் சேர்த்திருந்தது. 3-ம் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது. 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பிராத்வெய்ட் 6 ரன்களிலும், ஜோஸப் 14 ரன்களிலும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஜோஸப் 32 ரன்களிலும், ஹோப் 25 ரன்களிலும் வெளியேறினர். 4-வது விக்கெட்டுக்கு பிராத்வெய்ட், ப்ரூக்ஸ் ஜோடி சேர்ந்து ஓரளவுக்கு நிலைத்து ஆடி, இருவரும் அரை சதம் அடித்தனர்.

பிராத் வெய்ட் 75 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரும் சேர்ந்து 66 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த சேஸ், ப்ரூக்ஸுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்தனர். 242 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் அணி வலுவாக இருந்தது.

திருப்புமுனை விக்கெட்

பிராட் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி 68 ரன்களில் ப்ரூக்ஸ் வெளியேறியதுதான் திருப்புமுனையாக இங்கிலாந்து அணிக்கு அமைந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

நிதானமாக பேட் செய்த சேஸ் 51 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைநிலை வீரர்களான பிளாக்வுட், டோரிச் டக் அவுட்டில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹோல்டர் 2 ரன்களிலும், கேப்ரியல் 5 ரன்களிலும் பெவிலியன் திரும்ப மே.இ.தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

99 ஓவர்களில் 287 ரன்களுக்கு மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து அணி வீரர்கள் பிராட், வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், சாம் கரண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x