Last Updated : 19 Jul, 2020 02:55 PM

 

Published : 19 Jul 2020 02:55 PM
Last Updated : 19 Jul 2020 02:55 PM

2020 டி20 உலகக்கோப்பை ஒத்திவைப்பா? ஐசிசியின் நிர்வாகக் குழு நாளை முடிவு: ஐசிசி தலைவராக கங்குலி பெயர்?

கோப்புப்படம்

துபாய்

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 2020 டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை ஒத்திவைப்பது குறித்து நாளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாகக்குழுக் கூடி ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டம் காணொலி மூலம் நடத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் டி20 உலகக்கோப்பைப் போட்டித் தொடரை நடத்துவதற்கு ஆஸ்திரேலியா மறுத்துவருவதால், போட்டித் தொடர் ஒத்திவைப்பதற்கான சாத்தியமை அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஆனால், ஆஸ்திேரலியாவில் இன்னும் கரோனா வைரஸ் பாதிப்பு குறையவி்லலை. போட்டிகள் பெரும்பாலும் நடக்கும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலும் கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரி்த்து வருகிறது. ஆதலால், உலகக்கோப்பைப் போட்டியை நடத்தும் சூழலில் ஆஸ்திரேலியா இப்போது இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆதலால், நாளை நடக்கும் ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில், டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவதற்கு ஏதுவான சூழல் இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவே வாயப்புகள் உள்ளன.

ஆனால், 2022-ம் ஆண்டு தங்கள் நாட்டில் டி20 உலகக்கோப்பைப் போட்டித் தொடரை நடத்திக்கொள்ள வாய்ப்பு வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 2021-ம் ஆண்டு இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்பை விட்டுத் தருவதற்கு பிசிசிஐ தயராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை ஒத்திவைப்பக்கடுவதை பிசிசிஐ மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகிறது. ஏனென்றால், டி20 உலகக்கோப்பைப் போட்டி ஒத்திவைக்கப்பட்டால், அந்த அட்டவணையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 தொடரை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. இதற்கான ஒப்புதல்கள் ஐக்கிய அரபுஅமீரகத்தில் கிடைத்துள்ள நிலையில் மத்திய அரசிடம் இருந்து மட்டும் அனுமதி பெற வேண்டும்.

இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு அதிகம். ஆசியக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டதுபோல இதுவும் ஒத்திவைக்கப்படலாம். ஆனால்,அனைத்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்அமைப்பு எடுக்கும் முடிவில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

உலகக்கோப்பை டி20 தொடர் நடத்தும் எண்ணம் இல்லை என்பதை ஆஸ்திரேலிய வாரியம் மறைமுகம் சமீபத்தில் ெதரிவித்துள்ளது. தங்கள் அணியின் 26 வீரர்களை அறிவித்து, அவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக செப்டம்பரில் நடக்கும் ஒருநாள் தொடருக்கு தயாராகுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஆதலால் டி20 உலகக்கோப்பை நடத்த வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

மேலும், ஐசிசி தலைவராக இருந்த இந்தியாவின் ஷசாங்க் மனோகர் இந்த மாதத் தொடக்கத்தில் ராஜினாமா செய்துவிட்டதால், அவருக்கு பதிலாக புதிய தலைவருக்கான வேட்பாளர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்படலாம். இப்போது வரை இருவர் பெயர் பரவலாகப் பேசப்படுகிறது. ஒருவர் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, மற்றொருவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி கோலின் கிரேவ்ஸ் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x