Published : 19 Jul 2020 01:16 PM
Last Updated : 19 Jul 2020 01:16 PM
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பிசிசிஐ அமைப்பின் பொது மேலாளருமான சபா கரீம், பதவியிலிருந்து விலகும்படி பிசிசிஐ சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ சார்பில் எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை என்றபோதிலும், பிசிசிஐ வட்டாரங்கள் இந்தத் தகவலை மறுக்கவில்லை.
52 வயதாகும் சபா கரீம் இந்தியஅணிக்காக 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிசிசிஐ அமைப்பின் பொது மேலாளராக சபா கரீம் நியமிக்கப்பட்டார்.
ஆனால், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை வளர்க்கவும், அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்லவும் கரீம் எந்த ஆக்கர்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிசிசிஐ சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகறது.
அதுமட்டுமல்லாமல் கரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில்கூட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்துவது, மாற்று வழியில் கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்தலாம், வீரர்களின் பயிற்சி, மாற்றுத்திட்டம் என எதைப்பற்றியுமே சபா கரீம் பொதுமேலாளராக இருந்து கொண்டு ஆலோசிக்கவில்லை,
அது குறித்து திட்டமிடல்களை முன்வைக்கவும் இல்லை. கரோனாபாதிப்பு குறைந்தபின் எவ்வாறு உள்ளூர் போட்டிகளை நடத்தப்போகிறோம், எவ்வாறு தயாராக இருக்கிறோம், வீரர்களை எவ்வாறு தயார் படுத்தி இருக்கிறோம் என எந்தத் திட்டமிடலும் இல்லை என்று பிசிசிஐ தரப்பில் ஆதங்கம் வைக்கப்படுகிறது
இதையடுத்து சபா கரீமை பொது மேலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி பிசிசிஐ சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் டிசம்பர் மாதத்துக்கு முன்பாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க வாய்ப்பிப்லை. டி20 உலகக்கோப்பைப் போட்டி ரத்தாகும் பட்சத்தில் ஐபிஎல் போட்டி நடந்தால், உள்ளூர் போட்டிகள் அதே நேரத்தில் நடத்தப்படாது. ஆதலால், டிசம்பர் வரை உள்ளூர் போட்டிகள் நடத்தப்படாது என்பதால், எந்த திட்டமிடலும் செய்யாத பொதுமேலாளர் பதவிலியிருந்து சபா கரீம் ராஜினாமா செய்யக் கோரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரியிடம் இதேபோன்று பிசிசிஐ ராஜினாமா கடிதத்தை கேட்டுவாங்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT