Published : 19 Jul 2020 09:02 AM
Last Updated : 19 Jul 2020 09:02 AM
அரசியல்ரீதியாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பரம பகை இருந்தாலும் கிரிக்கெட்டில் களத்தில் இரு அணிகளும் வைரிகளாக இருந்தாலும் வீரர்கள் மத்தியில் எந்த ஒரு பகைமையும் இருந்ததில்லை, ஒருவருக்கொருவர் அன்புடன் தான் பழகி வந்தனர்.
இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் சகோதரத்துவத்துக்கு உதாரண சம்பவம் ஒன்றை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் பகிர்ந்து கொண்டார்.
1997-ல் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒன்றில் ரசிகர்கள் அசாருதீன் மனைவியை அவதூறு செய்து வந்தனர், இன்சமாம் உல் ஹக்கையும் ‘உருளைக் கிழங்கு’ என்று வம்பிழுத்தனர். இதனையடுத்து ரசிகர்களுடன் இன்சமாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இது சர்ச்சையாகி அப்பொது ஊடகங்களில் உருளைக்கிழங்கு என்று வம்பிழுத்ததால் இன்சமாம் ஆத்திரம் ரசிகர்களிடம் அத்துமீறல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டனர்.
ஆனால் உண்மையில் அன்று அசாருதீன் மனைவியை இழிவு படுத்திய ரசிகரையே இன்சமாம் கண்டித்ததாக வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.
“ஆம்! சிலர் இன்சமாம் உல் ஹக்கை உருளைக் கிழங்கு என்று கேலி செய்தனர், ஆனால் ரசிகர்களின் ஒரு பிரிவினர் அசாருதீன் மனைவியை அசிங்கமாகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இன்சமாம் உல் ஹக்கிற்கு ரசிகரின் இந்த நடத்தைப் பிடிக்கவில்லை. உடனே பாக். கேப்டனிடம் கூறி தன் பீல்டிங் நிலையை மாற்றக்கோரி 12வது வீரரை விட்டு பேட்டை எடுத்து வரச்சொல்லி அதை எடுத்து கொண்டு அந்த ரசிகரை நோக்கி அவர் மாடிப்படிகளில் ஏறிச்சென்று கண்டித்தார்.
இதுதான் நடந்தது, ஆனால் இந்த செயலுக்காக இன்சமாம் எச்சரிக்கப்பட்டார். இன்சமாம் உல் ஹக் 2 ஒருநாள் போட்டிகளுக்கு நீக்கப்பட்டார். இன்சமாம் உல் ஹக் கோர்ட் படியைக் கூட மிதிக்க வேண்டியதாயிற்று. அப்போது அசாருதீன் தான் அப்போது என்ன நடந்தது என்பதை விளக்கி இன்சமாமைக் காப்பாற்றினார்.
எந்த நபர் அசார் மனைவியை அவதூறு செய்தாரோ அவரிடமே அசார் பேசி சுமுகமாக தீர்த்து வைத்தார். இதுதான் இரு அணி வீரர்களுக்கும் இடையே உள்ள சகோதரத்துவம் என்று கூறுகிறேன். இரு அணிகளுக்கும் இடையிலான நட்பை மறுக்க முடியாது.” என்றார் வக்கார் யூனிஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT