Published : 19 Jul 2020 08:35 AM
Last Updated : 19 Jul 2020 08:35 AM
தென் ஆப்பிரிக்காவில் ஒரே நேரத்தில் 3 அணிகள் மோதும் 3டிசி சாலிடாரிட்டி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 61 ரன்களை வெளுத்து வாங்க அவரது அணி டேக் எ லாட் ஈகிள்ஸ் அணி தங்கம் வென்றது.
கரோனா வைரஸ் காரணமாக நின்று போன கிரிக்கெட் இங்கிலாந்து-மே.இ.தீவுகள் மூலம் டெஸ்ட் போட்டியாகத் தொடங்க, டி20 கிரிக்கெட் இல்லாத நேரத்தில் இந்த 3டி கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இதில் டிவில்லியர்ஸ் அணியின் டேக் ஏ லாட் ஈகிள்ஸ் அணி ஓவர்களை பிரித்து ஆடப்பட்ட ஆட்டத்தில் 12 ஓவர்களில் 160/4 என்று அதிரடி ஆட்டம் காட்டியது.
எதிர்த்து ஆடிய கைட்ஸ் அணி 12 ஓவர்களில் 138/3 என்றும் கிங்பிஷர்ஸ் அணி 113/5 என்றும் தோல்வி கண்டன.
டிவில்லியர்ஸ் அணியில் இவர் 24 பந்துகளில் பவுண்டரிகளும் சிக்சர்களையும் பறக்க விட்டு 61 ரன்கள் எடுக்க எய்டன் மார்க்ரம் 33 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார்.
இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆடப்பட்ட இந்த ஆட்டத்தில் முதல் பாதி முடிந்தவுடன் கிங்பிஷர் அணி 56/2 என்று இருந்தது, ஈகிள்ஸ் 66/1 என்றும் கைட்ஸ் 58/1 என்றும் இருந்தன.
டிவில்லியர்ஸும் மார்க்ரமும் ஆட்டமிழக்காமல் இருந்ததால் இரண்டாவது பாதியின் முதல் ஓவரிலேயே டிவில்லியர்ஸ் 20 ரன்களை விளாசினார். மார்க்ரம் 27 பந்துகளில் அரைசதம் எடுக்க டிவில்லியர்ச் 21 பந்துகளில் அரைசதம் கண்டார்.
டிவில்லியர்ஸின் ஈகிள்ஸ் அணியில் பெலுக்வயோ 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். கிளெண்டன் ஸ்டூர்மேன் என்பவர் 2/26 என்று பிரமாதமாக வீச, ஜான் ஃபோர்ட்டுயின் 20 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் நார்ட்யே 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
டிவில்லியர்ஸின் ஈகிள்ஸ் அணி தங்கம் வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT