Published : 18 Jul 2020 05:25 PM
Last Updated : 18 Jul 2020 05:25 PM
ராகுல் திராவிட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டியவர். சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான் இந்த இரட்டைச் சாதனையை இவருடன் இந்திய கிரிக்கெட் அணியில் வைத்திருப்பவர்.
இந்நிலையில் டெஸ்ட் வீரராக உருவாகவே தான் பயிற்சியளிக்கப்பட்டதாகக் கூறும் ராகுல் திராவிட் 1998-ல் தன்னை ஒருநாள் அணியிலிருந்து நீக்கிய போது பாதுகாப்பில்லாத நிலையை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 1996-ல் அறிமுகமான ராகுல் திராவிட் 10,889 ரன்களை 39.16 என்ற சராசரியில் எடுத்திருந்தார். 3 உலகக்கோப்பைத் தொடர்களில் ஆடியுள்ளார். 2007-ல் கேப்டனாகவும் இருந்தார்.
முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாடு வீரருமான டபிள்யூ.வி.ராமனுடன் நடத்திய உரையாடலில் ராகுல் திராவிட் கூறியதாவது:
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சில கட்டங்களில் பாதுகாப்பில்லாத நிலையை உணர்ந்திருக்கிறேன். 1998-ல் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். ஓராண்டு அணியில் இடம்பெறாமல் மீண்டும் போராடிதான் அணிக்குள் நுழைய முடிந்தது.
ஒரு டெஸ்ட் வீரராகவே பயிற்சியளிக்கப்பட்டு வளர்ந்த நான், ஒருநாள் கிரிக்கெட்டுக்கு நான் சரிப்பட்டு வருவேனா என்பது போன்ற பாதுகாப்பற்ற நிலை இருந்தது. அதாவது பந்தை தரையில்தான் ஆட வேண்டும், தூக்கிஅடிக்கக் கூடாது என்று வளர்க்கப்பட்டவன் நான்.
இதனால் ஒருநாள் போட்டிகளில் சோபிக்க முடியுமளவுக்கு திறமை நம்மிடம் இருக்குமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. என்றார் திராவிட்.
ஆனால் மீண்டும் வந்து ஒருநாள் போட்டிகளிலும் தன்னை நிலை நிறுத்தினார் குறிப்பாக 1999 உலகக்கோப்பைத் தொடரில் 461 ரன்களை 65.85 என்ற சராசரியில் எடுத்தது அவருக்கு ஒரு பெரிய தொடராக அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT