Published : 17 Jul 2020 08:11 PM
Last Updated : 17 Jul 2020 08:11 PM

எனக்கு 3 மாத பயிற்சி, 3 ரஞ்சி ஆட்டங்கள் போதும்: இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் இன்னமும் ரன் குவிக்க முடியும்: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உற்சாகம்

சவுரவ் கங்குலி : கோப்புப்படம்

கொல்கத்தா

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகள் ரன்கள் குவிக்க. எனக்கு 3 மாதம் பயிற்சி, 3 ரஞ்சி ஆட்டங்களில் நான் விளையாடினாலே போதுமானது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்னும் நம்பிக்கை குறையாமல் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வரலாற்றில் தோனிக்கு முன்பாக வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் "தாதா" கங்குலிதான். தோனியின் வெற்றிக்கு சச்சின், கங்குலி, திராவிட், யுவராஜ் சிங், கம்பீர், சேவாக் போன்ற அசைக்க முடியாத படை இருந்ததே காரணம் என்பதை மறுக்க இயலாது.

ஆனால், கங்குலி களத்தில் கேப்டன் பொறுப்பை ஏற்றுச் செயல்படும்போது சச்சின், கங்குலி, திராவிட் என மும்மூர்த்தி பேட்ஸ்மேன்கள் மட்டுமே உலக அணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார்கள். கங்குலி தான் கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்தபோதுதான், தோனி போன்ற பல்வேறு இளம் வீரர்களை வளர்த்து ஆளாக்கியவர் என்பதை மறுக்க முடியாது.

கிரேக் சேப்பல் பயிற்சியாளராக வந்தபின்புதான் கங்குலிக்கு அணியில் பெரும் சிக்கல் உருவானது. 2005-ம் ஆண்டு கங்குலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆப்-சைட் அடித்து விளையாடுவதில் மன்னன் என்று பெயரெடுத்த கங்குலி, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி களத்தில் நின்றுவிட்டால் எதிரணிகளுக்கு சிம்மசொப்னமாக இருப்பார்.

மனம்தளராத கங்குலி உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் 2006-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கத் தொடரில் இடம் பெற்று தனது திறமையை மீண்டும் நிரூபித்து அணிக்குள் வந்தார். ஆனால், 2007-08ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரில் ராகுல் திராவிட்டும், கங்குலியும் நீக்கப்பட்டனர். அந்த தொடருக்கு பின் அடுத்த ஓர் ஆண்டில் கங்குலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் 2012-ம் ஆண்டுவரை விளையாடினார்.

113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி 7,212 ரன்கள் குவித்துள்ளார் இதில் 16 சதங்கள் அடங்கும். 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கங்குலி11,363 ரன்கள் குவித்தார், இதில் 22 சதங்கள் அடங்கும்.

தன்னுடைய கடந்த கால நினைவுகள் குறித்தும், தன்னால் இன்னும் கிரிக்கெட்டில் இன்னும் சாதிக்க முடியும் என்பது குறித்து “சங்பாத் பிரதிதின்” வங்காள நாளேட்டுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

2007-ல்என்னை ஆஸ்திேரலியத் தொடரிலிருந்து நீக்காமல் கூடுதலாக இரு ஒருநாள் தொடர்களில் வாய்ப்பு அளித்திருந்தால் நான் இன்னும் அதிகமான ரன்கள் குவித்திருப்பேன். நான் நாக்பூர் டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறாமல் இருந்திருந்தால், அடுத்து நடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் அதிகமான ரன்களைக் சேர்த்திருக்க முடியும்.

இப்போதும்கூட நீங்கள் எனக்கு 6 மாதம் பயிற்சி அளித்து 3 ரஞ்சிப் போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கொடுத்தால் போதும் என்னால் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் ரன்களைக் குவிக்க முடியும். இல்லை, இல்லை, எனக்கு 3 மாத பயிற்சி போதும், என்னால் ரன்களைக் குவிக்க முடியும்.

எனக்கு நீங்கள் விளையாட வாய்ப்பை கொடுக்காமல் இருந்துவிட்டு, என் ஆழ்மனதுக்குள் இருக்கும் நம்பிக்கையை எவ்வாறு உடைக்க முடியும்.

என்னை இந்திய அணியிலிருந்து நீக்கிய அந்த தருணத்தை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. 2007-ம் ஆண்டு காலண்டர் ஆண்டில் நான்தான் இந்திய அணியில் அதிகமான ஸ்கோர் செய்திருந்தும் என்னை நீக்கினார்கள்.

உங்களிடம் இருந்து உங்களுக்கான மேடை பறிக்கப்படும்போது, என்னதான் சிறப்பாக விளையாடி இருந்தாலும், திறமையோடு இருந்தாலும், உங்களை எவ்வாறு நிரூபிக்க முடியும், யாரிடம் சென்று உங்களை நிரூபிக்க முடியும். அதேபோன்ற நிலைமைதான் எனக்கும் அப்போது நேர்ந்தது.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்

ரசிகர்களின் தாதா கங்குலி இன்னும் கிரிக்கெட் விளையாடத் தயாராகினால், அவரின் ஆட்டத்தைக் காண மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாத உண்மை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x