Published : 14 Jul 2020 03:27 PM
Last Updated : 14 Jul 2020 03:27 PM
மே.இ.தீவுகளுக்கு எதிராக சவுத்தாம்டன் ஏஜியஸ் பவுலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து மே.இ.தீவுகளிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி கண்டது.
இந்தப் போட்டிக்கு அனுபவ ஆல்ரவுண்டரான ஸ்டூவர்ட் பிராடை உட்கார வைத்து விட்டு பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். இங்கிலாந்து தேர்வுக்குழு பிராட் இது குறித்து கோபாவேசமாகக் கேட்ட போது 13 வீரர்களைத் தேர்வு செய்வது தான் எங்கள் வேலை ஆடும் 11 வீரர்கள் தேர்வு கேப்டன் கையில்தான் உள்ளது என்று பென் ஸ்டோக்ஸ் தான் காரணம் என்று பிராடிடம் போட்டுக் கொடுத்தது.
இந்நிலையில் பிராட் இருந்திருந்தால் தோல்வி ஏற்பட்டிருக்காது என்று ஒருசில தரப்புகள் அபிப்ராய்ப்பட பென் ஸ்டோக்ஸ் முடிவின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் “நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன், பின் வாங்க மாட்டேன், ஏனெனில் பிராட் போன்ற ஒரு வீரரை அணியில் தேர்வு செய்யாமல் இருப்பது மிகவும் கடினமான முடிவு. ஆனால் முதல் பந்து வீசுவதற்கு முன்பாக இந்த முடிவை எடுத்தோம்.
ஆகவே நானே என் முடிவிலிருந்து பின் வாங்கினால் மற்ற வீரர்களுக்கு நான் தவறான செய்தியை அளிப்பதாகவே அமையும்.
பிராட் தன்னைத் தேர்வு செய்யாதது குறித்து கோபப்பட்டது நியாயமே, இவ்வளவு அனுபவ வீரர், இங்கிலாந்துக்கு எத்தனையோ போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுத்தவர் இன்னும் கூட கிரிக்கெட் மீது இவ்வளவு பற்றுதலுடன் இருக்கிறார் என்றால் ஒரு மூத்த வீரராக அவரது உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால் நான் அதற்காக வருந்தினால் அது மற்ற வீரர்களுக்கு தவறாகப் போய்விடும்.
அன்று அவர் கொடுத்த பேட்டி அருமை, இன்னும் இவ்வளவு நேயத்துடன் கிரிக்கெட்டை தனக்குரியதாகக் கொண்டுள்ளது அபாரம்.
அடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை வெல்வதுதான் எங்கள் நோக்கம். ட்ரா செய்வது நோக்கமல்ல.” என்றார் பென் ஸ்டோக்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT