Published : 13 Jul 2020 04:00 PM
Last Updated : 13 Jul 2020 04:00 PM

போதிய தரமான வீரர்களை விராட் கோலிக்கு தோனி விட்டுச் செல்லவில்லை: கவுதம் கம்பீர் பேட்டி

யார் சிறந்த கேப்டன் கங்குலியா, தோனியா என்பதைக் கணிக்க பல்வேறு அளவுகோல்களை முன் வைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈஎஸ்பின் கிரிக் இன்போ இணைந்து நடத்திய கருத்தாய்வில் பங்குபெற்றவர்களில் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் ஒருவர்.

இவரோடு தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், குமார் சங்கக்காரா, கவுதம் கம்பீர் ஆகியோரும் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதில் நூலிழையில் தோனி கங்குலியை வென்றார். இதனையடுத்து ஸ்ரீகாந்த், கிரேம் ஸ்மித், சங்கக்காரா, கவுதம் கம்பீர் ஆகியோர் பேட்டி கொடுக்கும் போது தோனியையும் கங்குலியையும் அறுதியிட்டனர்.

இதில் கவுதம் கம்பீர் கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கங்குலி காலக்கட்டத்தில் அனில் கும்ளே, ஹர்பஜன் என்ற இரண்டு சிறந்த ஸ்பின்னர்கள் இருந்தனர். ஆனால் தோனிக்கு ஹர்பஜன் மட்டுமே இருந்ததால் இன்னொரு ஸ்பின்னரை அவர் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. எனவே அனில் கும்ளே இல்லாமல் தோனி சிறப்பாகவே செயல்பட்டதாக நான் கருதுகிறேன்.

எம்.எஸ்.தோனி தன் கேப்டன்சி காலத்தை முடித்த போது விராட் கோலிக்கு அவர் போதிய தரமான வீரர்களை விட்டுச் செல்லவில்லை. விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா தவிர வேறு தரமான வீரர்கள் இல்லை. அதாவது உலக அணிகளை தனித்துவமாகத் தோற்கடிக்கும் வீரர்கள் இல்லை அதாவது தொடர்களை வெல்லும் வீரர்கள் இல்லை என்று கூறுகிறேன்.

ஆனால் சவுரவ் கங்குலி விட்டுச் சென்ற வீரர்களைப் பாருங்கள், யுவராஜ் சிங் உலகக்கோப்பை ஆட்ட நாயகன். ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், சேவாக் போன்ற உலக அணிகளை வீழ்த்தும் வீரர்களைக் கொடுத்தார் கங்குலி.

ஒருநாள் கிரிக்கெட்டில் தோனிதான், டெஸ்ட் கிரிக்கெட்டில் கங்குலிதான். தோனி உள்நாட்டை அல்லது துணைக்கண்டத்தைத் தாண்டி வெளியே சதம் கூட அடித்ததில்லை. ஆனால் கங்குலி லார்ட்ஸிலும் ஆஸ்திரேலியாவிலும் சதமெடுத்துள்ளார்.

ஆனால் வென்ற கோப்பைகள் என்று பார்த்தால் தோனிதான் முன்னிலை. ஆனால் நாம் கோப்பைகளை வென்றோமே தவிர இந்தத் தொடர்களில் தோனி ஒரு வீரராக தாக்கம் செலுத்தவில்லை. ஆனால் 2003 உலகக்கோப்பையை எடுத்துக் கொண்டால் கங்குலி பிரமாதமாக ஆடியதை நாம் பார்த்திருக்கிறோம். 2007 டி20 உலகக்கோப்பையை எடுத்துக் கொள்ளுங்கள் தோனி பெரிய அளவில் ரன்களை எடுத்ததில்லை. (கம்பீர் இந்த இடத்தில் தவறு செய்கிறார், காரணம், 2007 உ.கோப்பையில் 6 இன்னிங்ஸ்களில் 154 ரன்கள் என்பது இந்திய வீரர்களில் 2ம் இடத்துக்குரியது). 2011 உலகக்கோப்பையிலும் தோனி பெரிதாக ரன்களை எடுக்கவில்லை.

ஆனால் கோப்பைகளை வெல்வதில் யார் என்று கேட்டால் அது தோனிதான். டி20, 2011, சாம்பியன்ஸ் ட்ராபி யை வென்றார் தோனி, ஆனால் சவுரவ் கங்குலி 2002 நாட்வெஸ்ட் ட்ராபியைத் தவிர வேறு தொடர்களை வெல்லவில்லை. (இங்கும் கம்பீர் தவறு செய்கிறார், 2002 சாம்பியன்ஸ் ட்ராபியில் இலங்கையுடன் சேர்ந்து இந்திய அணி இணை-சாம்பியனான போது கங்குலிதான் கேப்டன்).

ஆனால் இரு கேப்டன்களும் இந்திய அணியை முன்னேற்றத்துக்குக் கொண்டு சென்றனர். ஆம், கங்குலியை விட தோனி சுலபமாக இதைச் செய்தார். ஆனால் தாக்கம் செலுத்தியவர்கள் என்று கேட்டால் நான் தோனியையே குறிப்பிடுவேன். ஏனெனில் இந்திய கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த தோனி மிகவும் சீரியஸாக சிந்தித்தார். டெஸ்ட் கிரிக்கெட் தோனிக்கு பிடிக்காது என்று கருதுபவர்கள் தவறு, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டையும் சீரியஸாக எடுத்துக் கொண்டார். அதனால்தான் நாம் அவர் தலைமையில் நம்பர் 1 அணி என்ற இடத்துக்குச் சென்றோம்.

இவ்வாறு கூறினார் கவுதம் கம்பீர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x