Published : 12 Jul 2020 01:20 PM
Last Updated : 12 Jul 2020 01:20 PM
பிரிட்டனில் கரோனா வைரஸ் காலத்தில் மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்றும் மருத்துவர்களைக் கவுரவப்படுத்தும் விதமாக, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் இந்திய மருத்துவர் விகாஸ் குமார் பெயரை தனது ஜெர்ஸி (ஆடை)யில் எழுதி, பயிற்சியில் ஈடுபட்டார்.
கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று கற்பனை செய்த இந்திய மருத்துவர் விகாஸ் குமாருக்கு, தனது பெயரை சர்வதேச வீரர் ஒருவர் ஆடையில் எழுதி அணிந்திருந்த செயல் பெரும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்ததுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக 117 நாட்களாக சர்வதேச கிரிக்கெட் ஏதும் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது சவுத்தாம்டனில் இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
பிரிட்டனில் கரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களைக் கவுரவப்படுத்தும் விதமாக அவர்களின் பெயர், வீரர்கள் அணிந்திருக்கும் ஆடையில் எழுதப்பட்டுள்ளது. அந்த ஆடையுடன் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் துர்ஹாம் நகரில் டார்லிங்டனில் உள்ள தேசிய மருத்துவமனையில் பணியாற்றி வரும் இந்திய மருத்துவர் விகாஸ் குமார் பெயர் பதித்த ஜெர்ஸியை இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அணிந்துள்ளார்.
மருத்துவர்களைப் பெருமைப்படுத்தும் “ரைஸ் தி பேட்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் கிளப்புகளால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர் டாக்டர் விகாஸ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மருத்துவர் விகாஸ் குமார், டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்துவியல் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று எண்ணிய விகாஸ் குமாரால் மருத்துவராக மட்டுமே முடிந்தது.
திருமணமாகி தனது மனைவி, மகனுடன் கடந்த 2019-ம் ஆண்டு லண்டனில் குடியேறிவிட்டார்
விகாஸ் குமார் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் என் பெயர் பதித்த ஆடையை அணிந்ததைப் பார்த்தபோது மனதில் மகிழ்ச்சி நிரம்பியது.
நான் பணியாற்றும் என்ஹெச்எஸ் மருத்துவமனை ஊழியர்கள் ஏராளமான தியாகங்களைக் கரோனா காலத்தில் செய்துள்ளனர். அனைத்து மருத்துவ சமூகத்தினருக்கும், இந்தியாவில் உள்ள இந்திய மருத்துவ நண்பர்களுக்கும் இந்த அங்கீகாரம், பெருமை பொருந்தும்.
நான் என்னுடைய பள்ளிக்காலம், கல்லூரிக் காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரர். ஆனால், மருத்துவம் பயிலவே குடும்பத்தினர் விரும்பினர். கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது பிசிசிஐ சார்பில் போட்டியின் மருத்துவராகப் பணியாற்றினேன். அது மறக்க முடியாத தருணம்.
என்னுடைய மருத்துவமனையில் கரோனா காலத்தில் நான் இதுவரை 3,300 நோயாளிகளுக்கு மேல் சிகிச்சை அளித்திருப்பேன். இரு ஐசியுக்கள் பொறுப்பு மருத்துவராகவும் இருந்துகொண்டு, மயக்கமருந்து சிகிச்சையயும் அளித்துவந்தேன். நான் பணியாற்றிய காலத்தில் நானும் கரோனாவில் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்திய மருத்துவர்கள் ஜமாஸ்ப் கெய்குஸ்ரூ தஸ்தர், ஹரிகிருஷ்ணா ஷா, கிருஷ்ணா அகாடா ஆகியோரின் பெயரையும் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் ஆடையில் பதித்துப் பெருமைப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT