Published : 09 Jul 2020 10:54 AM
Last Updated : 09 Jul 2020 10:54 AM

117 நாட்களுக்குப் பிறகு மைதானம் கண்ட கிரிக்கெட்: முதல் டெஸ்டில் இங்கிலாந்து 35/1

கேப்ரியல் பந்தில் பவுல்டு ஆன சிப்லி.

பயோ-செக்யூரிட்டி நடைமுறைகளுடன் 117 நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் ஆட்டம் மைதானம் கண்டது. இங்கிலாந்து, மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட 17.4 ஓவர்களே சாத்தியமானது இதனையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் மட்டுமே.

ஏஜியஸ்பவுல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த முதல் டெஸ்ட் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கப்பட்டது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

ஆர்வத்துக்கு மழை தீனி போடவில்லை இங்கிலாந்து நேரம் மதியம் 2 மணி வரை ஆட்டம் சாத்தியமில்லாமல் இருந்தது. பிறகு முதல் 5 ஒவர்களுக்குள்ளாகவே இருமுறை மழை குறுக்கிட்டது.

முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பாக கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்களுக்காக அஞ்சலி செலுத்த வீரர்கள் அணி வகுத்தனர்.

மே.இ.தீவுகள் 3 டபிள்யூ லெஜண்ட்களில் கடைசி டபிள்யூவான எவர்டன் வீக்ஸ் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இங்கிலாந்து சுமார் 163 நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட்டைத் தொடங்கி முதல் 10 பந்துகளுக்கு பிறகு சிப்லி விக்கெட்டை இழந்தது, ஷனன் கேப்ரியல் வீசிய இன்ஸ்விங்கரை தவறாகக் கணித்து ஆடாமல் விட அது ஆஃப் ஸ்டம்ப் மீது மோதியது. பவுல்டு ஆனதோடு டக் அவுட்டும் ஆகி வெளியேறினார் சிப்லி.

அதன் பிறகு கொஞ்சம் மேகமூட்ட வானிலையில் பந்துகள் ஸ்விங் ஆக கிமார் ரோச் 6 ஓவர் 4 மெய்டன் 2 ரன்கள் என்று பிரமாதமாக வீச அல்ஸாரி ஜோசப், கேப்டன் ஹோல்டர் ஆகியோர் இங்கிலாந்துக்கு அதிக சிரமம் கொடுத்தனர். ட்ரைவ் ஆட முடியாமல், கட் புல் ஆட முடியாமல் ஒரு லெந்தில் வீசி, ரன் வாய்ப்பையும் முடக்கினர். ரோரி பர்ன்ஸ் 20 ரன்களுடனும் ஜோ டென்லி 14 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. பிட்ச் மேற்பகுதி உறுதியாக இருந்தாலும் மந்தமான பிட்ச் ஆகவே தெரிகிறது. இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் இல்லை, ஆண்டர்சன், மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளனர். மே.இ.தீவுகள் அணியும் வலுவாகவே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x