Published : 05 Sep 2015 09:03 PM
Last Updated : 05 Sep 2015 09:03 PM
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் மழை காரணமாக 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஃபின் வீசிய 2-வது பந்தில் அதிர்ச்சி காத்திருந்தது. டேவிட் வார்னர் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஃபின் வீசிய எகிறு பந்துக்கு வார்னரும் எகிறினார், ஆனால் பந்து கை விரலைக் கடுமையாகத் தாக்கியதன் காரணமாக ஸ்டீவன் ஃபின் வீசிய முதல் ஓவரிலேயே ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
இதையடுத்து ஜோ பர்ன்ஸுடன் இணைந்தார் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 26 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த ஜோ பர்ன்ஸ், ஸ்டீவன் ஃபின் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து ஸ்மித்துடன் இணைந்தார் பெய்லி. அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. ஜார்ஜ் பெய்லி 72 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த மேக்ஸ்வெல், பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார்.
மேக்ஸ்வெல் அதிரடி
மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் ஸ்மித் 87 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வாட்சன் களமிறங்க, மறுமுனையில் வெளுத்து வாங்கினார் மேக்ஸ்வெல். அதன் உச்சகட்டமாக மொயீன் அலி வீசிய 39-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார். 38 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 39.5 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்திருந்தது.
மார்ஷ் விளாசல்
இதையடுத்து ஷேன் வாட்சனுடன் இணைந்தார் மிட்செல் மார்ஷ். இந்த ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. அலி வீசிய 43-வது ஓவரில் மார்ஷ் ஒரு சிக்ஸரை விளாச, வாட்சன் தன் பங்குக்கு இரு சிக்ஸர்களை விரட்டினார். 38 பந்துகளைச் சந்தித்த வாட்சன் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார். வாட்சன்-மார்ஷ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து வந்த மேத்யூ வேட் 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் வெளுத்து வாங்கிய மார்ஷ் 26 பந்துகளில் அரைசதம் கண்டார். கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசிய மார்ஷ், கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார். இதனால் ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலியா 91 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டீவன் ஃபின் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மொயீன் அலி 8 ஓவர்களில் 68 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இவரது இந்த ஓவர்களில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசப்பட்டது. மொத்த ஆஸ்திரேலியா தனது இன்னிங்சில் 28 பவுண்டரிகளையும் 8 சிக்சர்களையும் விளாசியது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளிழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. மோர்கன் 2 ரன்களுடனும், ஜேம்ஸ் டெய்லர் 12 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், முன்னதாக, ஜேசன் ராய் 31 ரன்களில் கமின்ஸ் பந்திலும், ஒரு முறை மிட்செல் ஸ்டார்க்கின் அதிவேக பவுன்சருக்கு ஹெல்மெட்டில் அடிவாங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் 18 ரன்களில் கூல்ட்டர்-நைல் பந்திலும் வெளியேறினர். இங்கிலாந்து வெற்றி பெற ஓவருக்கு 6.55 ரன்கள் தேவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT