Published : 30 Jun 2020 07:45 PM
Last Updated : 30 Jun 2020 07:45 PM
இந்தியன்பிரீமியர் லீக் ஸ்பான்சராக சீன நிறுவனம் நீடிக்கக் கூடாது, மெதுவே அதன் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து வெளியே வர வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததையடுத்து சீனா மீதான கோபம் பெரிய அளவில் இந்திய மக்களிடையே பரவி வருகிறது. சீனப் பொருட்களை, சீன நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு குரல்கள் வலுத்து வருகின்றன.
மோடி தலைமையிலான மத்திய அரசு 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் விவோ ஐபிஎல் என்று ஐபிஎல் அழைக்கப்படுகிறது, இது சீன நிறுவனம், இதன் ஸ்பான்சரை இழக்க முடியாது என்று பிசிசிஐ பொருளாளர் ஏற்கெனவே கூறிய நிலையில் மீண்டும் அந்த பேச்சு எழுந்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர் நெஸ் வாடியா கூறும்போது, “ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து சீன ஸ்பான்ஷர்ஷிப்பை அகற்ற வேண்டும். நாட்டுக்காக இதைச் செய்ய வேண்டும். நாடுதான் முதலில் பணம் இரண்டாவதுதான். இது இந்தியன் பிரீமியர் லீக், சீனா பிரீமியர் லீக் அல்ல. இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
தொடக்கத்தில் புதிய ஸ்பான்சர் கிடைப்பது கடினமே, ஆனால் போதிய இந்திய ஸ்பான்சர்கள் இருக்கின்றனர் சீனாவுக்கு மாற்றாக. நம் நாடு, நம் அரசு, நம் ராணுவ வீரர்களுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். அவர்கள் நமக்காக உயிரைப்பணயம் வைக்கிறார்கள்.
இது தொடர்பாக அரசின் அறிவுறுத்தலுக்காகக் காத்திருத்தல் கூடாது, நமக்கே பொறுப்பு உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் நாம் தேசத்துடன் ஒன்றாக நிற்க வேண்டும்.
நான் பிசிசிஐ தலைவராக இருந்தால் இந்திய ஸ்பான்சர்களுக்காக அழைப்பு விடுத்திருப்பேன். இந்திய நிறுவனங்கள் ஐபிஎல் ஸ்பான்சருக்கு முன் வர வேண்டும்.
அதே போல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் மட்டுமல்ல அணிகளையும் சீன ஸ்பான்சர்ஷிப் கவர்ந்து வருகிறது அணிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சீன நிறுவனங்களை அகற்ற வேண்டும். நான் ஏற்கெனவே கூறியது போல் நிறைய இந்திய நிறுவனங்கள் உள்ளன.
எனக்கு தனிப்பட்ட முறையில் சீன பொருட்கள் பிடிக்காது ஏனெனில் அவை தரமற்றவை. மேக்கிங் இந்தியன் பையிங் இந்தியன் என்பதில் கவனம் வேண்டும். பெரிய அளவில் பொருட்களைக் குவித்து சீன நிறுவனங்கள் உலகையே மூச்சுத்திணறடித்து வருகின்றன. இந்தியாவை உற்பத்திக் கூடமாக மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும். சீனப் பொருட்களைத் தடுக்காவிட்டால் இந்தியத் தொழிற்துறை செத்துப்போய்விடும்” என்ற நெஸ் வாடியா, சீன செயலிகள் தடை குறித்து, “இந்தியா தன் ஆட்டத்தை சரியாக ஆடினால் நாடு அது ஆசைப்படும் சூப்பர்பவராக மாறும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT