Published : 29 Jun 2020 03:25 PM
Last Updated : 29 Jun 2020 03:25 PM
டெல்லி கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் தோபல் கரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட நோய்ச்சிக்கல்களுக்கு திங்கள் காலை மரணமடைந்தார். இவருக்கு வயது 52.
சஞ்சய் தோபலுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர், சித்தாந்த் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ரஞ்சி வீரர், இன்னொரு மகன் ஏகான்ஷ் டெல்லி யு-23 வீரர்.
தோபல் ஏர் இந்தியா பணியாளர் ஆவார், நல்ல மனிதர், பிறருக்கு உதவும் குணமுடையவர் என்று பலரும் இவரைப் பற்றி தெரிவித்துள்ளனர்.
இவருடன் விளையாடிய முன்னாள் டெல்லி கேப்டன் கே.பி. பாஸ்கர் கூறும்போது, “எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இவர் உதவுவார். மிகவும் கலகலப்பான மனிதர், வீரர்கள் விமானத்தில் பயணிக்கும் போது அவர்களுக்கு எந்த ஒரு வசதி குறைவும் ஏற்படாதவாறு பார்த்துப் பார்த்து செயல்படுவார்” என்றார்.
சஞ்சய் தோபலின் பயிற்சியாளர் தாரக் சின்ஹா, கூறும்போது, “உள்ளூர் கிரிக்கெட் மட்டத்தில் தோபல் ஒரு டீசண்ட் வீரர். எனக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார் அவர், பதின்ம வயதில் என்னிடம் பயிற்சிக்கு வந்தார், நல்ல திறமைகளை வெளிப்படுத்தினார். அதிரடி நடுவரிசை வீரர் தோபல், சிறந்த ஆஃப் ஸ்பின்னரும் கூட. தனிநபராக போட்டிகளை வென்று கொடுக்கக் கூடியவர்.
தோபல் பற்றி டெல்லி வீரர் மிதுன் மன்ஹாஸ் கூறுகையில், “வீரராகத் தொடங்கி பிறகு ஏர் இந்தியாவின் பயிற்சியாளர் ஆனார். உடற்தகுதியை நன்றாகப் பராமரிப்பார், டெல்லி துவாரகாவில் உள்ள அவரது அகாடமியில் முதலில் உடல் தகுதிதான் பிரதான கவனம்.
கரோனா கண்டுப்பிடிப்பதற்கு முன்பாக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார். இவருக்காக பிளாஸ்மா சிகிச்சை ஞாயிறன்று ஏற்பாடு செய்தோம். ஆனால் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது” என்றார் வருத்தத்துடன் மிதுன் மன்ஹாஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT