Published : 27 Sep 2015 01:32 PM
Last Updated : 27 Sep 2015 01:32 PM

இந்திய அணியை மேம்படுத்துவதில் கோலி சரியான பாதையில் செல்கிறார்: இயன் சாப்பல் அலசல்

டி20 கிரிக்கெட்டினால் தாக்கம் பெற்ற இரண்டு சர்வதேச டெஸ்ட் கேப்டன்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி என்று கூறும் இயன் சாப்பல் விராட் கோலியின் தலைமைத்துவத்தை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.

இது பற்றி ஆங்கில ஊடகத்தில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:

கோலி ஆக்ரோஷமான அணுகுமுறையை இந்திய அணிக்குள் புகுத்தி தன்னம்பிக்கை அணுகுமுறையுடன் அரிதான அயல்நாட்டு டெஸ்ட் தொடர் வெற்றியை இலங்கை மண்ணில் சாதித்துள்ளார். ஒரு லட்சியார்த்தமான கிரிக்கெட் உலகில், டெஸ்ட் கிரிக்கெட்டின் நுட்பங்களையும் சுவாரசியங்களையும் பரப்ப விரும்பும் கிரிக்கெட் நிர்வாகிகள் இருப்பார்களேயானால் அவர்கள் நிச்சயம் கோலி வகை தலைமைத்துவத்தின் பல குணாதிசியங்களை தம்பட்டம் அடித்துப் பரப்புவார்கள் என்பதில் ஐயமில்லை.

கோலி வகை தலைமைத்துவம் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகமாக்குவது மட்டுமல்ல, தனது அணியை முன்னேற்றுவதில் கோலி சரியான பாதையில் செல்கிறார்.

அடிலெய்டில் ஒரு சாத்தியமில்லாத வெற்றிக்காக இந்திய அணியை சவாலுக்கு தயார் படுத்தினார். இதில் அவர்கள் சவாலை விரும்பும் வீரர்களை ஒன்று திரட்டி வெற்றிக்கான வேட்டையைத் தொடங்கினார்.

தனது வீரர்களுக்கே கிரிக்கெட்டை சுவாரசியம் மிகுந்ததாக மாற்றுவதுதான் கேப்டனின் முக்கிய கடமை, அதில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சவாலை விரும்பும் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஒருமுறை கூறும்போது, “நல்ல கேப்டனாக இருக்க பந்துவீச்சை அறிந்திருப்பது அவசியம்” என்றார்.

இலங்கையில் தனது ஸ்பின்னர்களை விராட் கோலி மிகவும் புத்திசாலித் தனமாக கையாண்டு இம்ரான் கூறியதற்கு ஏற்ப செயல்பட்டார். இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசெல்ல விராட் கோலி ஆஸ்திரேலியா, மற்றும் தென் ஆப்பிரிக்காவில் வேகப்பந்து வீச்சாளர்களை கையாள்வதிலும் இதே அணுகுமுறையை காண்பித்தாரேயானால் இந்திய அணி வேறொரு நிலையை எட்டும்.

அவர் தனது ஆக்ரோஷத்தை தனக்கு எதிராகவேயல்லாமல் தனக்கு சாதகமாக பயன்படுத்தினால், அவர் இலங்கையில் செய்தது போல், நிச்சயம் இந்திய அணியின் ஒரு சிறந்த தலைவராக அவர் உருவெடுப்பார்.

இவ்வாறு அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் இயன் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x