Published : 23 Jun 2020 03:37 PM
Last Updated : 23 Jun 2020 03:37 PM
ரஞ்சி நாயகனும், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான வாசிம் ஜாபர் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஓர் ஆண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய வாசிம் ஜாபர் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். மும்பை அணிக்காகவும், விதர்பா அணிக்காவும் விளையாடி பல்வேறு கோப்பைகளை பெற காரணமாக ஜாபர் இருந்துள்ளார்
41 வயதாகும் வாசிம் ஜாபர் இதுவரை வீரராக மட்டுமே களத்தில் ஜொலித்து வந்த நிலையில் முதல்முறையாக ஒரு அணியை பட்டைத் தீட்டும் பணியில் களமிறங்க உள்ளார்.
மும்பை, விதர்பா அணியில் ஜாபர் விளையாடிய காலத்தில், தன்னுடன் விளையாடும் இளம் வீரர்களுக்கு அவ்வப்போது கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி அவர்களை கூர்படுத்தினார். இப்போது முழுநேரப் பணியில் ஜாபர் இறங்க உள்ளார்.
மும்பையைச் சேர்ந்த வாசிம் ஜாபர், இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையான ரஞ்சிக் கோப்பையில் 150 ஆட்டங்களுக்கு மேல் களமிறங்கி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றார்.
இதற்கு முன் இந்திய வீரர் தேவேந்திர பண்டேலா 145 முறையும், அமோல் மஜூம்தார் 136 முறையும் ரஞ்சிப் போட்டியில் களமிறங்கியுள்ளார். இதுதான் அதிகபட்சமாகும். ஆனால், அனைத்தையும் வாசிம் ஜாபர் முறியடித்தார்.
அதுமட்டுமல்லாமல் ரஞ்சிக் கோப்பையில் 12 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் எனும் பெருமையையும் வாசிம் ஜாபர் பெற்றார்.
41 வயதாகும் வாசிம் ஜாபர், 1996-97 ஆம் ஆண்டு ரஞ்சிப் போட்டியில் அறிமுகமானார். இதுவரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடி 11 ஆயிரத்து 775 ரன்களை ஜாபர் சேர்த்துள்ளார்.
253 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் ஜாபர் 19 ஆயிரத்து 410 ரன்கள் சேர்த்து தனது சராசரியை 50.67 ஆக வைத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் வாசிம் ஜாபர் 40 சதங்கள் அடித்துள்ளார்.
இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் வாசிம் ஜாபர் களமிறங்கியுள்ளார். இதில் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாபர் 1,944 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 5 சதங்களும், 11 அரை சதங்களும் அடங்கும். இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதமும், மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக இரட்டை சதமும் வாசிம் ஜாபர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
உத்தரகாண்ட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து வாசிம் ஜாபர் கூறுகையில் “ ஒரு அணிக்கு தலைமைப்பயிற்சியாளராக முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளேன். மிகவும் சவாலான பணி, எனக்கு புதிதான பணி.என்னுடைய விளையாட்டு வீரர் வாழ்க்கைக்குப்பின் நேரடியாக பயிற்சியாளராக வந்துள்ளேன்
உத்தரகாண்ட் அணி புதிய அணி, கடந்த 2018-19 சீசனில் நன்றாகவும் வளையாடியுள்ளார்கள். அடிமட்டத்திலிருந்து எனது பயிறச்சியை தொடங்குவதால் சவாலாகவே இருக்கும், நல்ல அனுபவமாகவும் அமையும்.
உத்தரகாண்ட் அணியிலிருந்து ஏராளமான நல்ல வீரர்கள் வந்துள்ளார்கள் என்று அறிந்துள்ளேன்.
வரும் காலத்தில் சிறந்த அணியாக மாற்றவும்நான் முயற்சிப்பேன். கடந்த 5 ஆண்டுகளில் நான் ஏராளமான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளேன். எனக்கு அது மகிழ்ச்சியாக இருந்து. நான் பயிற்சியளித்த இளம் வீரர்கள் வளர்ந்து வரும்போது அதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT