Published : 22 Jun 2020 02:52 PM
Last Updated : 22 Jun 2020 02:52 PM
முன்னாள் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடந்தது என்று கூறப்போக அது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தோனி தலைமையில் வென்றது பலரது மகிழ்ச்சிக்குக் காரணமானது. அதுவும் தோனி அடித்த அந்த கடைசி சிக்ஸ் ஒரு மூலப்படிவமாக நினைவில் தேங்கிய ஒன்று. சச்சின் டெண்டுல்கருக்காக இந்திய அணி வென்ற உலகக்கோப்பை அது என்பதும் அறிந்ததே. அது அவரது நினைவுச்சின்ன உலகக்கோப்பையாகும்.
இந்நிலையில் இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்தா அலுத்கமகே அது ஒரு பிக்சிங் பைனல் என்று குண்டைத்தூக்கிப் போட அதனை முன்னாள் இலங்கை வீரர்கள் ஜெயவர்தனே, சங்கக்காரா உள்ளிட்டோரே மறுத்துள்ளனர்.
இந்நிலையில் 1996 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வெற்றி இலங்கையின் சதநாயகன் அதிரடி வீரர் அரவிந்த டி சில்வா இந்தச் சர்ச்சைப் பற்றி கூறும்போது, “எல்லா நேரத்திலும் பொய்கூறுபவர்களை அப்படியே விட்டு விட்டு சென்று விடக்கூடாது, அவர்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். அதனால்தான் பிசிசிஐ, இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐசிசி இதனை உடனே விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
நாம் நம் உலகக்கோப்பை வெற்றியை எப்படி கொண்டாடுகிறோமோ அப்படித்தான் சச்சின் டெண்டுல்கர் தன் வாழ்நாள் முழுதும் இந்த உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடுகிறார். ஆகவே சச்சின் டெண்டுல்கரின் நலனை முன்னிட்டாவது, கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை முன்னிட்டாவது இந்திய அரசும் அதன் கிரிக்கெட் வாரியமும் அவர்கள் வென்ற உலகக்கோப்பை பிக்ஸ் செய்யப்பட்டதல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை உள்ளது.
இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் நிறைய பேரை பாதிக்கிறது. எங்களை மட்டுமல்ல, அணித்தேர்வாளர்கள், வீரர்கள், அணி நிர்வாகம், இவர்களையெல்லாம் விட உலகக்கோப்பையை அதற்குரிய தரத்துடனும் தகுதியுடனும் வென்ற இந்திய அணியை பாதிக்கிறது. நாம் நேசிக்கும் இந்த கிரிக்கெட்டின் மிகப்பெரிய நன்மைக்காக நாம் இதை தெளிவுபடுத்தி வெளியே வர வேண்டும்.” என்று அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT