Published : 22 Jun 2020 01:53 PM
Last Updated : 22 Jun 2020 01:53 PM
இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை ஸ்பின்னர் ரஜீந்தர் கோயல் ஞாயிறன்று தனது 77வது வயதில் ரோஹ்டக்கில் தன் இல்லத்தில் காலமானார்.
157 முதல் தர கிரிக்கெட்டில் ஆடி 750 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இந்திய அணிக்காக ஆடியதில்லை என்பதுதான் புரியாத புதிர் என்பதோடு ஒரு திறமையை சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்தவிடாமல் செய்தது பெரிய வருத்தங்களை கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்படுத்திய ஒன்றாகும்.. பெரும்பாலும் ஹரியாணா அணிக்காக ஆடியவர்.
ரஞ்சி ட்ராபி போட்டிகளில் 637 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரஞ்சி சாதனையை வைத்திருப்பவர். தமிழகத்தின் எஸ்.வெங்கட்ராகவன் 107 விக்கெட்டுகள் குறைவாக 2வது இடத்தில் இருக்கிறார். 1957-58-ல் உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 44 வயது வரை இந்திய உள்நாட்டு போட்டிகளில் ஆடியுள்ளார்.
2017-ல்தான் பிசிசிஐ இவரை அங்கீகரித்து சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. இவரது மரணத்துக்கு சச்சின், கங்குலி, விராட் கோலி, பிஷன் பேடி உட்பட பலரும் இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிஷன் பேடி இவருடன் ஆடியவர், ஒரு விதத்தில் கோயெல் இந்திய அணியில் இடம்பெறாததற்கு பிஷன் பேடியையும் ஒரு காரணமாகக் கூற முடியும், பேடி கேப்டனாக இருந்த போது கூட கோயலை அவர் அங்கீகரித்து தேர்வு செய்ததில்லை, ஆனால் இப்போது ரஜீந்தர் கோயலுக்காக பேசும் பேடி, “அவர் ஒரு ஜெம், அவர் பெரிய பெரிய விருதுகளுக்குத் தகுதி பெற்றவர்” என்று கூறியுள்ளார்.
கோயல் சாப் என்று செல்லமாக பாசத்த்துடன் அழைக்கப்பட்ட ரஜீந்தர் கோயல் 39,781 பந்துகளை வீசி முதல் தர கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்.
இந்தியாவுக்கு ஆட முடியாமல் போனதைப் பற்றி அவர் ஒரு முறை கூறிய போது “என்னை விட சிறந்த பவுலர்கள் இருந்தார்கள்” என்றார். இவரது இந்த வார்த்தையை நினைவுகூர்ந்த கபில்தேவ், “என்ன ஒரு பணிவு, தன்னடக்கம்” என்று விதந்தோதினார்.
ரஜீந்தர் கோயல் தன் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பேசிய போதெல்லாம் எந்த ஒரு கசப்புணர்வும் வெளிப்பட்டதில்லை, “நான் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளின் அளவு எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமே. என்னைப்பொறுத்தவரை மேட்சில் ஆட வேண்டும். அது எந்த மட்டமாக இருந்தாலும் சரி. வலையிலோ மேட்சிலோ பந்து வீசவில்லை எனில் எனக்கு உறக்கம் வராது” என்றே அவர் ஒருமுறை கூறினார்.
1958-ல் ஆரம்பித்த இவரது கிரிக்கெட் வாழ்க்கை 1985-ல் முடிவடைந்தது. பேடி இவரைப் பற்றி நினைவுகூர்ந்த போது, “எனக்கு முன்னால் கிரிக்கெட்டைத் தொடங்கி எனக்குப் பிறகு நீண்ட நாட்கள் விளையாடினார். இவர் மறைவு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிரிக்கெட்டின் தன்னலமற்ற மாணவர் இவர். டெல்லி, ஹரியாணா, வடக்கு மண்டல அணிகளுக்கு இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் ஆடிய எந்த அணியும் இவரது ஒழுக்கம், அர்ப்பணிப்பு, நேர்மையைப் பாராட்டத் தவறியதில்லை.
கோயலை மற்றவர்களிடமிருந்து தனியாக்குவது அவரது தன்னம்பிக்கை. இவரும், சந்திரசேகரும்தான் கேப்டன் என்ன பீல்ட் செட் செய்தாலும் கவலைப்படாமல் அதற்கேற்ப வீசக்கூடியவர்கள். கோயல் சாப் எப்போதும் எனக்கு இந்த களவியூகம் வேண்டும் என்று கேட்டதில்லை, பந்து வீச அவர் காட்டும் ஆர்வம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நான் பவுலிங் செய்ய வேண்டும். இதுதான் அவரது கோரிக்கை, நாள் முழுதும் வீசச் சொன்னாலும் அயராது வீசுவார்.
பவுலிங் மீது அவருக்கு உள்ள பற்றுதல் என்னை பொறாமைப் படச் செய்துள்ளது. தன் பவுலிங் மீது அவர் ஒரு போதும் அதிருப்தி அடைந்ததில்லை. அனைத்து சூழ்நிலைகளிலும் அவர் தன்னுடைய சிறந்த பவுலிங்கை செய்துள்ளார். அவருக்கு இந்தியாவுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் இதற்காக அவர் யாரையும் குற்றம்சாட்டியதில்லை.” என்றார் பிஷன் பேடி.
கபில்தேவ் கூறும்போது, “கோயல் எப்போதும் இளம் வீரர்களை ஊக்குவிப்பார், அவர்கள் இருப்பதை விரும்புவார். அவர் தன் பவுலிங்கில் மூலமே போட்டிகளை வென்று கொண்டிருக்கும் போது நான் அறிமுகமானதை பெருமையாகக் கருதுகிறேன். ரத்தம் வரும் வரை பவுலிங் செய்பவர், ஆனாலும் விட மாட்டார். கேப்டன் அழைத்தால் ஒரு போதும் மறுக்க மாட்டார். ஒருமாதிரியான ரிதம் பவுலர், கொஞ்சம் பிட்சில் உதவியிருந்தால் அவர் பந்துகளை ஆட முடியாது. இன்று ஆடியிருந்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பார். கிரேட் கிரிக்கெட் வீரர், இதய அளவில் மிகவும் எளிமையான மனிதர்” என்றார் கபில்தேவ்.
பிஷன்சிங் பேடி அவரது பந்து வீச்சை விவரிக்கும் போது, “கோயல் சாப் பவுலிங்கை ரன்களை அவ்வளவு எளிதாக எடுத்து விட முடியாது. கையை பக்கவாட்டில் கொண்டு வந்து வீசக்கூடியவர், முதல் பந்திலிருந்தே எதிரணி பேட்ஸ்மென் மரியாதை கொடுக்கும் ஒரு பவுலர். துல்லியம் அபாரம், அவர் தோள்பட்டையை நன்றாகப் பயன்படுத்துவார். பந்தை எதிர்த்திசையில் திருப்புவதிலும் வல்லவர், பெரிய அளவில் பந்துகளை திருப்பக் கூடியவர் அல்ல. ஆனால் பேட்ஸ்மென் ரிலாக்ஸ் ஆக முடியாது. அபாயகரமாக எந்த பிட்சிலும் வீசக்கூடியவர், எனது நெருங்கிய நண்பரை இழந்து விட்டேன்” என்றார்.
சுனில் கவாஸ்கர் கூறும்போது, இந்தியாவுக்கு ஆடாத இரண்டு சிறந்த ஸ்பின்னர்களான பத்மாகர் ஷிவல்கர், ரஜீந்தர் கோயல் இருவரையும் தான் ஆடியதாகக் கூறினார். சுனில் கவாஸ்கர் இவரைப் புகழ்ந்தது பற்றி கோயல் ஒருமுறை கூறிய போது, “இந்திய அணிக்கு ஆடுவதற்குச் சமம் சுனிலின் புகழாரம்” என்றார்.
ரஜீந்தர் கோயல் 53 முறை இன்னிங்ஸுக்கு 5 விக்கெட்டுகளையும், 17 முறை மேட்சுக்கு 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அந்தக் காலத்து லிட்டில் மாஸ்டர் ஜி.ஆர்.விஸ்வநாத் கூறும்போது, “இந்தியாவுக்கு ஆடாவிட்டால் என்ன? அவர் ஒரு சாம்பியன் பவுலர். நான் விளையாடிய, பார்த்த எந்த ஒரு ஸ்பின்னருக்கும் கோயல் குறைதவரில்லை. பிட்ச் பற்றி கவலையே இல்லாத பவுலர்” என்றார்.
ரோஹ்டக்கில் வயதான போதிலும் ஸ்கூட்டரில் சுற்றிச் சுற்றி வருபவராம் ரஜீந்தர் கோயல். “டூ வீலரே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றாராம் கோயல், பிஷன் பேடி கூறிய வார்த்தைகள் முத்தாய்ப்பானது, “கடவுள் அனுப்பிய மனிதர், உண்மையான விளையாட்டு வீரன், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.
-தி இந்து ஸ்போர்ட்ஸ்டார்,
தமிழில்.. இரா.முத்துக்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT