Published : 12 Sep 2015 08:17 AM
Last Updated : 12 Sep 2015 08:17 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் ஜேமி முர்ரே-ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி யில் ஜேமி முர்ரே-ஜான் பியர்ஸ் ஜோடி 6-4, 6-7 (2), 7-6 (7) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்டீவன் ஜான்சன்-சாம் கியூரி ஜோடியைத் தோற்கடித்தது.
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ந்து 2-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள் ளது ஜேமி-ஜான் ஜோடி. முன்ன தாக கடந்த ஜூலையில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் இந்த ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
வெற்றி குறித்துப் பேசிய ஜேமி முர்ரே, “அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம். எதிர் ஜோடியும் மிகச்சிறப்பாக சர்வீஸ் அடித்தனர். ஆனாலும் அதை சமாளித்து அவர்களை நாங்கள் வீழ்த்திவிட்டோம்” என்றார்.
ஜேமி-ஜான் ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் பிரான்ஸின் பியர் ஹியூஸ் ஹெர்பர்ட்-நிகோலஸ் மஹத் ஜோடியை சந்திக்கிறது. ஹெர்பர்ட்-மஹத் ஜோடி தங்களின் அரையிறுதியில் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் டொமினிக் இங்லாட்-ஸ்வீடனின் ராபர்ட் லின்ட்ஸ்டெட் ஜோடியைத் தோற்கடித்தது.
செரீனா ஆட்டம் ஒத்திவைப்பு
உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்-இத்தாலியின் ராபர்ட்டா வின்ஸி மற்றும் ருமேனியாவின் சைமோனா ஹேலப்-இத்தாலியின் பிளேவியா பென்னட்டா இடையிலான அரையிறுதி ஆட்டங்கள் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT