Published : 12 Sep 2015 04:22 PM
Last Updated : 12 Sep 2015 04:22 PM
அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் அரையிறுதியில் இத்தாலி வீராங்கனை ரொபர்ட்டோ வின்ச்சியிடம், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வெல்லும் 4-வது டென்னிஸ் வீராங்கனை என்ற வரலாற்றை நிகழ்த்த செரீனா விளையாடி வந்தார். ஆனால் வின்ச்சி, 2-6, 6-4, 6-4 என்ற செட்களில் செரீனாவின் கனவை தகர்த்தார்.
இத்தாலியின் வின்ச்சி இந்த தொடரில் தரவரிசை வழங்கப்படாதவர் என்பதோடு, அவரது முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வின்ச்சி ஒரு இரட்டையர் ஸ்பெஷலிஸ்ட். உலகத் தரவரிசையில் 43-வது இடமே இவருக்கு உள்ளது. செரீனா தோற்க வாய்ப்பேயில்லை என்றே கருதப்பட்டது.
ஆனால் அந்த 6-2 என்று ஆதிக்கம் செலுத்திய முதல் செட்டுக்குப் பிறகே செரீனாவின் கால்கள் நகரவில்லை, ஆட்டத்தில் மாற்றமும் செய்யப்படவில்லை பேஸ்லைனிலேயே தனது நகர்தலை வைத்துக் கொண்டார்.
16 ஏஸ் சர்வ்களை செரீனா அடித்தாலும், 4 டபுள் பால்ட்கள் மற்றும் 26 திடீர் தவறுகள் ஆகியவை ஆட்டத்தின் மிக முக்கியக் கட்டத்தில் நிகழ்ந்தது என்பதே செரீனாவின் பின்னடைவுக்குக் காரணம். மேலும் வின்னர்கள் கூட செரீனா 93, வின்ச்சி 85 என்றே இருக்கிறது, அப்படியிருந்தும் மிகவும் அனாயசமாக வின்ச்சி வெற்றி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வலைக்கு அருகில் 25 முறை வந்து ஆடிய வின்ச்சி 18 முறை அதில் வெற்றி கண்டார். ஆனால் செரீனா பேஸ்லைனிலேயே தேங்கி விட்டார். 2வது செட்டில் மிகவும் சோம்பேறித்தனமாக ஆடி வந்த செரீனா கடைசியில் பேக் ஹேண்ட் ஷாட் ஒன்றை அலட்சியமாக ஆடி அது சரியாக அமையாமல் செட்டைக் கோட்டை விட்டார். தனது டென்னிஸ் ராக்கெட்டை தூக்கி அடித்து அதற்கு ஒரு எச்சரிக்கையும் அவருக்கு விடுக்கப்பட்டது.
ஆனால் செரீனாவின் ஆட்டத்திலும் உத்வேகம் பிறக்கவில்லை, வின்ச்சிக்கு வெற்றி பெறப் போகிறோம் என்ற உற்சாகம் பிறந்தது, இதனையடுத்து சில நல்ல ஷாட்கள் கைகூட 3-வது செட்டையும் கைப்பற்றி செரீனாவுக்கு அதிர்ச்சியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT