Last Updated : 22 Sep, 2015 04:06 PM

 

Published : 22 Sep 2015 04:06 PM
Last Updated : 22 Sep 2015 04:06 PM

வங்கதேசத் தொடரில் எங்களுடன் பணியாற்ற விருப்பமா?- ஸ்ரீராமுக்கு டேரன் லீ மேன் அனுப்பிய மின்னஞ்சல்

கிரிக்கெட் உலகில் கொண்டாடப்படும் ஒரு அணியின் ஆலோசகராக தான் பணியாற்றுவது குறித்து முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாடு அணியின் முன்னாள் வீரருமான எஸ்.ஸ்ரீராம் பெருமிதமடைவதாக தெரிவித்துள்ளார்.

இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்பதை நினைவுகூர்ந்த எஸ்.ஸ்ரீராம், அன்று காலை மின்னஞ்சலை அவர் பார்த்துக் கொண்டிருந்த போது, ஆச்சரியகரமான ஒரு மின்னஞ்சல் ஸ்ரீராம் பார்வைக்கு வந்தது.

அதில், “ஹாய் ஸ்ரீ.. (ஆஸ்திரேலியா) ஏ அணியுடன் நீங்கள் பணியாற்றிய விதம் குறித்து அறிந்தேன். வங்கதேச தொடரில் எங்களுடன் பணியாற்ற விருப்பமா? -டேரன் லீ மேன்” என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மின்னஞ்சலை இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடர் முடிவில் டேரன் லீ மேன், எஸ்.ஸ்ரீராமுக்கு அனுப்பியிருந்தார்.

“இந்த மின்னஞ்சலை பார்த்து அதனுள் செல்ல சிறிது நேரம் ஆனது. ஆஸ்திரேலியா போன்ற கொண்டாடப்படும் ஒரு அணிக்காக பணியாற்றுவது ஒரு மிகப்பெரிய மரியாதையாகக் கருதுகிறேன்” என்று எஸ்.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஏ அணி இங்கு டெஸ்ட் தொடரில் வென்றது ஆஸ்திரேலிய வீரர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றுத் தந்ததையடுத்து இந்த வாய்ப்பு ஸ்ரீராமுக்குக் கைகூடியுள்ளது.

அதன் பிறகு வங்கதேச அணி வீரர்கள் பற்றிய தனது முழு கருத்தை ஸ்ரீராம், லீ மேனுக்கு அனுப்பினார். இதன் பிறகு இன்னொரு ஆச்சரியகரமான மின்னஞ்சல் ஸ்ரீராமுக்கு வந்தது.

இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அனுப்பியது, “வங்கதேச கிரிக்கெட் பற்றி மிக முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். நிச்சயம் இத்தகவல்கள் பயனளிக்கும். எங்களுடன் கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளுங்கள்”

ஸ்ரீராம் இது பற்றி கூறும்போது, “ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு முழு தொடர், எனவே இவர் மற்றும் டேரன் லீ மேனுடன் பணியாற்றுவது உற்சாகமளிக்கிறது” என்றார்.

ஆஸ்திரேலியா ஏ வீரர்களுக்கு தான் அளித்த ஆலோசனைகள் பற்றி ஸ்ரீராம் கூறும்போது, “துணைக் கண்ட பிட்ச்களில் பந்துகளின் கோணத்தை கவனியாது, பிட்ச் ஆகும் லெந்த்தை கவனிக்க வேண்டும் என்று கூறினேன். பந்து பிளைட் செய்யப்படவில்லை என்பதால் பின்னால் சென்று ஆடுவதோ, அல்லது பிளைட் செய்துவிட்டார் என்பதற்காக கிரீஸிலிருந்து எகிறி விளையாடவோ தேவையில்லை. பந்து எங்கு பிட்ச் ஆகப்போகிறது என்பதை தீர்மானியுங்கள், அதன் பிறகு எப்படி ஆடுவது என்பது கைகூடும்.

பவுலர்கள் பந்தை ரிலீஸ் செய்யும் விதங்கள் பற்றி அவர்களுக்கு தெரிவித்தேன். பந்தின் தையல் இருக்கும் கோணம் அதனால் பந்து விழும் திசை மற்றும் அளவு அதன் பிறகு அது எப்படி நடந்து கொள்ளும் ஆகியவற்றை விளக்கினேன்.

அதே போல் பல்வேறு தரப்பட்ட பேட்ஸ்மென்களுக்கு எந்தெந்த கோணங்களில் வீச வேண்டும், எந்த வேகத்தில் வீச வேண்டும் என்பதையும் பகிர்ந்து கொண்டேன்” என்றார்.

இதனையடுத்து தற்போது பெரிய சவாலுக்கு ஸ்ரீராம் அழைக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x