Published : 18 Jun 2020 05:20 PM
Last Updated : 18 Jun 2020 05:20 PM
2011-ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் எங்கள் நாட்டு அணி விலை போய்விட்டது. மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது என்று இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்தா அலுத்காமகே பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
2011-ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைப் போட்டிக்கான இறுதி ஆட்டம் மும்பையில் நடந்தது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கை அணியும் மோதின.
கபில் தேவ் தலைமையில் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றிருந்த இந்திய அணி, 2-வது முறையாக தோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்றது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஜெயவர்த்தனா சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து 275 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. இந்திய அணி லீக் ஆட்டம் முதற்கொண்டு சிறப்பாக ஆடி காலிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடையும் சூழலி்ல யுவராஜ் சிங்கால் வெற்றி பெற்றது. அரையிறுதியில் பாகிஸ்தானை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் கவுதம் கம்பீர் அடித்த 97 ரன்களும், கேப்டன் தோனி அடித்த 91 ரன்களும் வெற்றிக்கு வித்திட்டு, கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தன.
ஆனால் அந்த போட்டியில் பிக்ஸிங் செய்யப்பட்டது, இலங்கை அணி விலைபோய்விட்டது என்று அந்நாட்டின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்தா அலுத்காமகே குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் வெளிவரும் சிரசா எனும் சேனலுக்கு மகிந்தாநந்தா அலுத்காமகே நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம் பிக்ஸிங் செய்யப்பட்டது. அந்தப் போட்டியில் நாங்கள் (இலங்கை அணி) விலை போய்விட்டோம் என்று இன்று உண்மையைச் சொல்கிறேன்.
அப்போது நான்தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தேன். ஒரு நாடு எனும் முறையில் நான் இதை அறிவிக்க விரும்பவில்லை. 2011 அல்லது 2012-ம் ஆண்டு போட்டியா என உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் அந்த இறுதிப்போட்டியில் நாங்கள்தான் வெல்ல வேண்டிய ஆட்டம். நான் பொறுப்புணர்வுடன் இதைக் கூறுகிறேன். அன்றைய ஆட்டம் பிக்ஸிங் செய்யப்பட்டதுதான். இதை நான் யாரிடமும் வாதிட முடியும். இதைப் பற்றி அந்த நேரத்தில் மக்கள் அதிகமாகக் கவலைப்பட்டத்தையும் நான் அறிந்தேன். இந்த பிக்ஸிங்கில் எந்த வீரர்களும் ஈடுபடவில்லை. ஆனால் சில கட்சிகள் ஈடுபட்டன” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டு குறித்து அன்றைய ஆட்டத்தில் சதம் அடித்த ஜெயவர்த்தனாவி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இலங்கையில் தேர்தல் நெருங்கிவிட்டது, சர்க்கஸ் வேலை தொடங்கிவிட்டது. பெயர்கள், ஆதாரங்கள் என இனிமேல் வெளியாகும். இது முட்டாள்தனமான குற்றச்சாட்டு” எனத் தெரிவித்தார்.
2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த இறுதி ஆட்டத்தைக் காண இலங்கையின் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவும், மகிந்தாநந்தா அலுத்காமகேவும் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் முடிந்த சில மாதங்களில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளதால் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT