Published : 17 Jun 2020 08:48 AM
Last Updated : 17 Jun 2020 08:48 AM
நாடு முழுதும் கரோனா பரவல் காரணமாக தளர்வுடன் கூடிய லாக்டவுன் அனுசரிக்கப்பட்டு வருகிறது, விளையாட்டுப் போட்டிகள் உலகம் முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்நிலையில் சென்னை ஐபிஎல் பணியாளர் ஒருவருக்கு இந்த ஊரடங்கு காலத்தில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பத்தான் ரூ.25,000 கொடுத்து உதவியுள்ளார்.
கடந்த 2015 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக இர்பான் பதான் விளையாடினார். இவரும் இவரது சகோதரருமான யூசுப் பதானும் ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு மாஸ்குகள், உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் கொடுத்து உதவினர்.
தற்போது ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை அணியின் பணியாளர் பாஸ்கரன் என்பவருக்கு இர்பான் பதான் ரூ.25,000 கொடுத்து உதவினார். இவர் கடந்த 12 ஆண்டுகளாக சென்னை அணியினரின் ஷூக்கள், கிளவ்கள் சரி செய்யும் பணியில் இருந்தார்.
இவருக்கு உதவியதை அறிந்த தினேஷ் கார்த்திக் கூறும்போது, “அனைவரும் இது போன்று உதவும் உள்ளங்கள் கொண்டிருந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும், இர்பான் பதானின் இந்தச் சிறப்பான செயலுக்கு பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT