Published : 13 Jun 2020 03:58 PM
Last Updated : 13 Jun 2020 03:58 PM
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. கடந்த 1996 முதல் 2018-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய அப்ரிடி 27 டெஸ்ட் போட்டிகள் (1,716 ரன்கள், 48 விக்கெட்), 398 ஒருநாள் போட்டிகள் (8,064 ரன்கள், 395 விக்கெட்), 99 டி20 போட்டிகளில் (1,416 ரன்கள், 98 விக்கெட்) விளையாடியுள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் பாகிஸ்தானில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் அப்ரிடி தொடர்ந்து விளையாடி வருகிறார். தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அப்ரிடி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை தனது அமைப்பு மூலம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் அப்ரிடிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், சிறிது நேரத்தில் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. உடல்வலி கடுமையாக இருந்தது. மருத்துவர்கள் எனக்குப் பரிசோதனை நடத்தியதில் எனக்கு கரோனா இருப்பது உறுதியானது. விரைவாக குணமடைய பிரார்த்தனைகள் அவசியம். இன்ஷா அல்லாஹ்” எனத் தெரிவித்துள்ளார்.
அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்ததையடுத்து அவரின் ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தும், பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அப்ரிடி ஓய்வு பெற்றாலும் அவருக்கான ரசிகர்கள் குறையவில்லை.
இம்மாதத் தொடக்கத்தில் முன்னாள் வீரர் தவுபீக் உமருக்கு கரோனா ஏற்பட்டு அவர் அதிலிருந்து குணமடைந்தார். இதுதவிர கராச்சியைச் சேர்ந்த உள்நாட்டு வீரர்கள் ரியாஸ் ஷேக், ஜாபர் சர்பிராஸ் இருவரும் கரோானா தொற்றுக்குப் பலியானார்கள். இரு வீரர்களும் முதல் தரக் கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT