Last Updated : 13 Jun, 2020 02:08 PM

 

Published : 13 Jun 2020 02:08 PM
Last Updated : 13 Jun 2020 02:08 PM

இந்தியாவில் தெருநாயிடம் கடி வாங்கி 12 தடுப்பூசி போட்ட நியூஸி.முன்னாள் கிரிக்கெட் வீரர்: வயது மூப்பால் காலமானார்

பிரதிநிதித்துவப்படம்

ஆக்லாந்து

இந்தியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வந்திருந்தபோது நாயிடம் கடி வாங்கி 12 தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூஸிலாந்து முன்னாள் வீரர் மாட் பூர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த 1955-ம் ஆண்டு இந்தியாவுக்கு நியூஸிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாட வந்திருந்தது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டி நடந்தது.

அப்போது நியூஸிலாந்து அணியில் மாட் பூர் இடம் பெற்றிருந்தார். மாட் பூரே மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தார் அனைவருமே நாய் மீது அளவற்ற அன்பு செலுத்தக்கூடியவர்கள்.

பெங்களூருவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நியூஸிலாந்து அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மைதானத்துக்குள் ஒரு தெருநாய் புகுந்தது. அந்த நாயைப் பார்த்த மாட் பூர், நாயின் மீதான பாசத்தால் அதை விரட்டிப் பிடிக்க ஓடினார்.

ஆனால், நாயோ தன்னை அடிக்க வருகிறார்கள் என நினைத்து ஓடியது. எப்படியோ நாயைக் காட்டிலும் வேகமாக ஓடி அதைப் பிடித்த மாட் பூரை நாய் கடித்து விட்டுத் தப்பி ஓடியது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், அதன்பின் அந்த நாயைக் கண்காணித்தபோது, அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு 12 தடுப்பூசிகள் வயிற்றில் போடப்பட்டன.

நியூஸி முன்னாள் வீரர் மாட் பூர்

இதுகுறித்து மாட் பூரேவின் மகன் ரிச்சார்ட் கூறுகையில், “ இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோதுதான் என் தந்தையை நாய் கடித்தது. கடித்த நாய்க்கு ரேபிஸ் இருப்பதும் அதன்பின் தெரியவந்தது. அந்த நேரத்தில் நியூஸிலாந்து அணியுடன் எந்த மருத்துவரும் பயணிக்கவில்லை. தொடர்ந்து இருவாரங்கள் நாள்தோறும் வயிற்றில் 12 ஊசிகள் போட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் இந்தியாவில் பயணத்தில் இருந்தபோது, 12 ஊசிகளை என் தந்தை வயிற்றில் போட்டுக்கொண்டார். இதில் ஒரு முறை மருத்துவர் கிடைக்காமல் என் தந்தை 100 கி.மீ. பயணித்து குறிப்பிட்ட மருத்துவரிடம் தடுப்பூசி போட்டுக்கொண்டார்'' எனத் தெரிவித்தார்.

ஆல் ரவுண்டரான மாட்பூரே கடந்த 1953-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை நியூஸிலாந்து அணியில் விளையாடியவர். நியூஸிலாந்து அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மாட் பூரே 355 ரன்கள் சேர்த்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x