Published : 01 Sep 2015 02:53 PM
Last Updated : 01 Sep 2015 02:53 PM
கார்டிப் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. மொயின் அலி 46 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக திகழ, கேப்டன் மோர்கன் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 74 ரன்களை வெளுத்துக் கட்டினார்.
இருவரும் இணைந்து 74 பந்துகளில் 135 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கூல்டர் நைல், கமின்ஸ் சிக்கனம் காட்டினர். ஸ்டார்க், மேக்ஸ்வெல், மார்ஷ், ஸ்டாய்னிஸ், வாட்சன், பாய்ஸ் பந்து வீச்சில் ரன்கள் விளாசப்பட்டன.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஸ்கோர் 12 ரன்களில் இருந்த போது வார்னர், வாட்சன் விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு ஸ்மித் (90), மேக்ஸ்வெல் (44) அச்சுறுத்தினாலும் கடைசியில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து 5 ரன்களில் தோல்வி தழுவியது. 161/3 என்ற நிலையிலிருந்து ஆட்டத்தை கோட்டை விட்டது ஆஸ்திரேலியா.
இந்த வெற்றியில் பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னும், பந்து வீச்சில் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தாலும். அவரது பங்களிப்பு மற்ற விதங்களில் இங்கிலாந்தின் வெற்றியை தீர்மானித்தது என்றால் மிகையாகாது.
பிரமாதமான கேட்ச் ஒன்றை பிடித்த ஸ்டோக்ஸ், கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் மிக அற்புதமாக வீசி 6 ரன்களையே விட்டுக் கொடுத்தார். கிளென் மேக்ஸ்வெல் 32 பந்துகளில் 44 ரன்கள் என்று அபாயகரமாகத் திகழ்ந்த போது, மொயீன் அலி பந்தை இழுத்து அடிக்க பந்து லாங் ஆன் திசையில் ஸ்டோக்ஸுக்கு வைடாகச் சென்றது ஓடிச் சென்ற ஸ்டோக்ஸ் டைவ் அடித்து நம்ப முடியாத கேட்ச் ஒன்றை எடுத்தார், இது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
கிளென் மேக்ஸ்வெல் சென்றவுடன் அடுத்த அதிரடி மன்னன் மிட்செல் மார்ஷ் 13 ரன்களில் இருந்த போது இங்கிலாந்து அறிமுகவ் வீச்சாளர் டாப்லி அருமையான ஸ்லோ பந்து மூலம் மார்ஷை பவுல்டு செய்தார். கடைசி 14 பந்துகளில் 16 ரன்களுக்கு ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வி தழுவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT