Published : 15 Sep 2015 06:10 PM
Last Updated : 15 Sep 2015 06:10 PM
வீட்டில் வேலை செய்து வந்த 11 வயது சிறுமியை சித்ரவதை செய்ததாக எழுந்த புகார்களை அடுத்து வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசைன் மற்றும் அவரது மனைவி நிரித்தோ ஷஹாதத் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.
இருவரையும் தேடும் பணியை வங்கதேச போலீஸ் முடுக்கி விட்டுள்ளது. அவரது செல்போன் தடம் காணப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஷபிகுர் ரஹ்மான் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “10 போலீஸார் கொண்ட தனிப்படை அமைத்து அவரைத் தேடி வருகிறோம். தினமும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு வருகிறோம் தற்போது அவரது மொபைல் போன் அழைப்புகளை தடம் கண்டு வருகிறோம்” என்றார்.
மஹ்பூசா அக்தர் என்ற 11 வயது சிறுமி டாக்கா தெருவொன்றில் காயங்களுடன் காணப்பட்டார். பிறகு இவர் போலீஸ் மற்றும் உள்நாட்டு ஊடகம் ஒன்றில் தன்னை கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும் அடித்துத் துன்புறுத்தியதாக வேதனையுடன் தெரிவித்தார்.
இது குறித்து தொலைக்காட்சியில் காட்டப்பட்ட போது, 11 வயது சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது தெரியவந்துள்ளது. சிறுமியின் கையை அடுப்பில் வைத்ததாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது டாக்கா மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு முடியும் வரை ஷஹாதத் ஹுசைன் எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடக்கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜ்முல் ஹசன் கூறியதாக ஈ.எஸ்.பி.என். வெளியிட்டுள்ள செய்தியில், “ஷஹாதத் ஹுசைனுக்கு சலுகை காட்டும் பேச்சுக்கே இடமில்லை. அவர் என்னைச் சந்திக்க வந்தார், நான் அவரை சந்திக்கவில்லை. என்னால் ஒன்றும் செய்ய முடியாது இது இந்த நாட்டின் சட்டம் தீர்மானிக்க வேண்டிய ஒன்று என்றே நான் அவரிடம் கூறியிருப்பேன்” என்றார்.
ஷஹாதத் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளிலும் 51 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT