Last Updated : 03 Jun, 2020 07:10 PM

1  

Published : 03 Jun 2020 07:10 PM
Last Updated : 03 Jun 2020 07:10 PM

ஜூன் 3: வாசிம் அக்ரம் பிறந்த நாள்: 916 விக்கெட்டுகள் வீழ்த்திய சுல்தான் ஆஃப் ஸ்விங்!

சர்வதேச கிரிக்கெட்டில் 916 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் இவர். டெஸ்ட், ஒரு நாள் என இரு போட்டிகளிலும் தலா 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரு வீரர்களில் இவரும் ஒருவர். 1992-ம் ஆண்டில் அந்த வீரர் இடம் பெற்ற அணி உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த வீரரும்கூட. அவர், ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று புகழப்பட்ட வாசிம் அக்ரம்!

அவரைப் பற்றிய 10 தகவல்கள்:

* லாகூரைச் சேர்ந்த வாசிம் அக்ரமை சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அழைத்து வந்தவர் ஜாவித் மியான்தத். 1984-ல் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த மியான்தத், 18 வயதான அக்ரமின் திறமையைப் பார்த்து அணிக்குள் கொண்டுவந்தார்.

* 1984-ல் பாகிஸ்தான் வந்த நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் வாரிய அணிக்கு எதிராக மோதியது. சர்வதேச முதல் தரப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்தார் அக்ரம். அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார்.

* நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு தனது உடைமைகளை பையில் வைத்து அக்ரம் தயாரானபோது, கேப்டன் மியான்தத்திடம், போட்டியில் விளையாடச் செல்லும்போது செலவுக்கு நான் எவ்வளவு பணம் கொண்டுவர வேண்டும் என்று அப்பாவியாகக் கேட்டவர். கிரிக்கெட் விளையாடினால், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பணம் கொடுக்கும் என்ற உண்மை கூட அப்போது அவருக்குத் தெரியாது.

* 1992-ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி கட்டத்தில் வாசிம் அக்ரம் எடுத்த 33 ரன்களும், பந்துவீச்சில் அவர் வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் பாகிஸ்தான் கோப்பை வெல்லக் காரணமானது. இறுதிப் போட்டியில் வாசிம் அக்ரம் ஆட்ட நாயகன் விருது பெற்றதே அதற்கு உதாரணம்.

* அச்சுறுத்தும் வகையில் பந்துவீசக்கூடிய வாசிம் அக்ரம், இளம் வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். 30 வயதிலேயே நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 36 வயது வரை வீரியம் குறையாமல் சர்வதேசப் போட்டிகளில் முத்திரைகளைப் பதித்தார்.

* 1980-90-களில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர் வாசிம் அக்ரம். குறிப்பாக அவருடைய துல்லியமான யாக்கர் பந்துவீச்சும் பவுன்சரும் பேட்ஸ்மேன்களின் தொடையை நடுங்கச் செய்யும். சர்வதேசப் போட்டிகளில் 4 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் அக்ரம். டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் தலா இரு முறை இந்தச் சாதனையைச் செய்தவர் அக்ரம். 1989, 1990-ம் ஆண்டுகளில் ஷார்ஜாவில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் இரு முறையும்; 1999-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரு முறையும் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

* 2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், ஒரு நாள் போட்டிகளில் முதன் முறையாக 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற முத்திரையைப் பதித்தார் அக்ரம். ஒரு நாள் போட்டியில் 502 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டியில் 416 விக்கெட்டுகள் என 916 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அக்ரம். அக்ரம் போலவே ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் சாதனை படைத்தை இன்னொரு வீரர் இலங்கையின் முத்தையா முரளிதரன்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக ரன் குவித்த வீரர் என்ற சிறப்பைப் பெற்றவர் அக்ரம். 1996-ல் ஷேக்புராவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 8-வதாக களமிறங்கி 257 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார் அக்ரம். 22 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் இதில் அடக்கம். மிகச் சிறந்த பந்துவீச்சாளரான அக்ரம், சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்ட நாள் அது.

* லெப்ட்-ஆர்ம் பந்துவீச்சாளர்களில் டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர் இவர்தான். இதேபோல ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட லெப்ட்-ஆர்ம் பந்துவீச்சாளர் இவர் மட்டுமே.

* ஐ.பி.எல். போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு பகுதியாக இல்லாதபோதும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தவர் வாசிம் அக்ரம். இவர் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்தபோது கொல்கத்தா அணி 2012, 2014-ம் ஆண்டுகளில் கோப்பை வென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x