Published : 30 May 2020 08:40 PM
Last Updated : 30 May 2020 08:40 PM
கடந்த 3 மாதங்களாக ஜெர்மனியில் சிக்கியிருந்த முன்னாள் சர்வதேச சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் சனிக்கிழமை பின்னிரவு இந்தியா திரும்பவுள்ளார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சர்வதேச விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது. ஜெர்மனி நாட்டுக்கு ஒரு சதுரங்கத் தொடரில் கலந்துகொள்ள விஸ்வநாதன் ஆனந்த் சென்றிருந்தார். கரோனா நெருக்கடி காரணமாக இந்த மூன்று மாதங்களும் ஃப்ராங்ஃபர்ட் நகரில் தங்கியிருந்தார்.
மேலும் இணையத்தில் நடந்த சதுரங்கப் போட்டிக்கு வர்ணனையும் செய்து வந்தார். மேலும் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நடந்த ஒரு இணைய சதுரங்க ஆட்டத்தில் இந்திய அணியை வழிநடத்தினார். தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலமாக தொடர்பிலிருந்த ஆனந்த், சதுரங்க ஆட்டம் சம்பந்தமான மற்ற வேலைகளில் ஆழ்ந்திருந்தார்.
தற்போது விமானப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் ஜெர்மனியிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்தியா புறப்பட்டுள்ளார். சனிக்கிழமை டெல்லி வழியாக, பெங்களூரு விமான நிலையம் வந்தடையவுள்ள ஆனந்த் கர்நாடக அரசின் விதிப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்பே சென்னை திரும்புவார். இந்த செய்தியை அவரது மனைவி அருணா உறுதி செய்துள்ளார்.
ஜெர்மனியிலிருந்து வரும் விமானங்கள் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டும் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT