Last Updated : 04 Aug, 2015 10:38 AM

 

Published : 04 Aug 2015 10:38 AM
Last Updated : 04 Aug 2015 10:38 AM

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய தடகளம்: ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை- ஐஓசி தலைவர் தாமஸ் பேச் எச்சரிக்கை

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) தலைவர் தாமஸ் பேச் எச்சரித்துள்ளார்.

சர்வதேச தடகள சம்மேளனத் தின் புள்ளி விவரங்கள் வெளியில் கசிந்துள்ளன. அதன்படி 2001 முதல் 2012 வரையிலான காலங்களில் 5 ஆயிரம் தடகள வீரர்களிடம் இருந்து பெறப்பட்ட 12 ஆயிரம் ரத்த பரிசோதனை மாதிரிகளின் முடிவுகள் தெரிய வந்துள்ளன. அதில் ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 800 மீ. ஓட்டம் முதல் மாரத்தான் வரையிலான பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று 55 தங்கம் உள்பட 146 பதக்கங்களை வென்ற வர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தி யிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என ஜெர்மனியைச் சேர்ந்த ஏஆர்டி தொலைக்காட்சி சேனலும், பிரிட்டன் சன்டே டைம்ஸ் பத்திரி கையும் செய்தி வெளியிட்டுள்ளன.

2012-ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 10 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இதுபோன்ற ஊக்கமருந்து குற்றங்களில் ஈடுபடுவோர் கண்டுபிடிக்கப்படும்போது அவர்களிடம் இருந்து பதக்கத்தை பறித்துள்ளது ஐஓசி. ஒலிம்பிக் போட்டிகளின்போது வீரர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகளை தேவைப்படும்போது மறுஆய்வு செய்வதற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை பாதுகாத்து வருகிறது ஐஓசி.

இந்த நிலையில் இது தொடர்பாக தாமஸ் பேச்சிடம் கேட்டபோது, “ஊக்கமருந்து விவகாரம் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். தேவைப்படும்பட்சத்தில் நாங்களே விசாரணை நடத்துவோம்” என்றார்.

விசாரணையில் இறங்கி ரஷ்யா

ஊக்கமருந்து விவகாரத்தில் சந்தேகிக்கப்படுவர்களில் 80 சதவீதத்தினர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என செய்தி வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரஷ்ய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து மிகத்தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஐஏஏஎஃப் தலைவர் சாடல்

தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், சர்வதேச தடகள சம்மேளனத்தின் (ஐஏஏஎஃப்) தலைவர் லேமைன் டியாக்கோ, அதை மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வீரர்களிடம் இருந்து பதக்கத்தை பறிக்கும் நோக்கிலேயே இதுபோன்ற பிரச்சாரங்கள் ஊடகங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அனைவரும் கவனமாக இருங்கள். ஜெர்மன் தொலைக் காட்சி மற்றும் பிரிட்டன் பத்திரிகையில் வெளியான செய்திகளை நாங்கள் பார்த்தோம். அது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க எங்கள் அலுவலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

2001 முதல் 2012 வரையிலான காலங்களில் பதக்கங்கள் தவறாக வழங்கப்பட்டுள்ளதாக சிறப்பு நிபுணர்கள் (ஊடகங்கள்) முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அது தொடர்பாக நான் கருத்து சொல்லமாட்டேன். ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து சர்வதேச தடகள சம்மேளன நிபுணர்கள் குழு ஆராயட்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x