Published : 30 May 2020 12:59 PM
Last Updated : 30 May 2020 12:59 PM

‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி’: ஏ.பி.டிவில்லியர்ஸ்தான் அனைத்துகால சிறந்த பீல்டர்- ஜான்ட்டி ரோட்ஸ் கருத்து

உலகின் தலைசிறந்த பீல்டர் என்றால் அது நம்மைப் பொறுத்தவரை, நாம் பார்த்தவரை தென் ஆப்பிரிக்காவின் மின்னல் ஜான்ட்டி ரோட்ஸ்தான் என்று அறிந்திருக்கிறோம், ஆனால் அவரோ தன்னை விடவும் சிறந்த அனைத்து கால பீல்டர் ஏ.பி.டிவில்லியர்ஸ்தான் என்கிறார்.

ஜான்ட்டி ரோட்ஸின் பல ரன் அவுட்களை, தடுப்புகளை, திகைக்கவைக்கும் கேட்ச்களில் குறிப்பிட்டு சிலவற்றைக் கூற வேண்டுமெனில் 1992 உலகக்கோப்பையில் இன்சமாம் உல் ஹக்கை ரன் அவுட் செய்த விதம் அப்போது கிரிக்கெட் உலகிற்கு புதியது. அதே போல் டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒரு விநோத சாதனைக்குரியவராக மாற ரோட்ஸின் பீல்டிங் தான் காரணம்.

டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக 3ம் நடுவர் மூலம் ரன் அவுட் கொடுக்கும் முறையில் ரன் அவுட் ஆன முதல் வீரர் சச்சின் டெண்டுல்கர்தான். இதற்கும் காரணம் ஜான்ட்டி ரோட்ஸின் பீல்டிங் தான், பாயிண்டில் பந்தை அடித்து விட்டு லேசாக ஓடலாமா என்றுதான் ஒரு காலை எடுத்தார் சச்சின் திரும்பிப் பார்ப்பதற்குள் ஸ்டம்பின் மேல் இருந்த கில்லியைக் காணவில்லை. சச்சினே திகைத்துப் போய்விட்டார், ரன் அவுட்.

அதற்கு அடுத்த டெஸ்ட்டில் ஜான்ட்டி ரோட்ஸுக்கு சவால் அளிக்கும் விதமாக சச்சின் சக்தி வாய்ந்த கட் ஷாட்களை வெளுத்து வாங்க அவரும் பிடிக்க முயல ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கேப்டன், ரோட்ஸ் கையில் காயம்பட்டுக் கொள்வார் என்று பாயிண்டிலிருந்து ஸ்கொயர் லெக்கிற்கு அவரை மாற்றிய சுவாரசிய சம்பவமும் உண்டு. சச்சின் தன்னை வீழ்த்தும் பவுலர்களை மட்டும் என்ன சேதி என்று கேட்க மாட்டார், தன்னை ரன் அவுட் செய்தவரையும் என்ன சேதி என்று கேட்கும் ஆக்ரோஷமிக்கவர்.

அதே போல் ஒருமுறை மே.இ.தீவுகளுக்கு எதிராக 4 அசாத்திய கேட்ச்களைப் பிடித்து கேட்ச்களினாலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி தேடித் தந்தார் ஜான்ட்டி ரோட்ஸ். இப்படி பீல்டிங்கில் வசிட்டர் ஆன ஜான்ட்டி ரோட்ஸ் வாயினால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றுள்ளார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ஜிம்பாப்வே வீரர் மபாங்க்வாவுடன் பேசிய ரோட்ஸ் கூறியதாவது:

அனைத்து கால சிறந்த பீல்டரா? ஏ.பி.டிவில்லியர்ஸ்தான், விக்கெட் கீப்பிங் செய்வார், ஸ்லிப்பில் நிற்பார், மிட் ஆஃபில் பீல்ட் செய்வார், லாங் ஆனில் நிற்பார், உண்மையில் உலகின் அனைத்துக் கால சிறந்த பீல்டர் ஏ.பி.டிவில்லியர்ஸ்தான்.

முதலில் நான் பார்த்தவரையில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அனைத்து இடங்களிலும் பீல்டிங் செய்யும் திறமை கொண்டவர். டிவில்லியர்ஸ் ஆட்டத்தை நுணுக்கமாக அறிந்தவர் என்பதால் தன்னை சரியான இடத்தில் நிறுத்திக் கொள்வார். சுரேஷ் ரெய்னாவையும் பிடிக்கும்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தலைசிறந்த பீல்டர் ஏ.பி.டிவில்லியர்ஸ்தான், என்றார் ஜான்ட்டி ரோட்ஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x