Published : 18 May 2020 08:24 AM
Last Updated : 18 May 2020 08:24 AM
இந்தியாவுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் விஷம் கக்கும் பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்ரிடி ஒரு ஜோக்கர் எனவும் 16 வயதே நிரம்பிய சிறுவன் என்றும் கம்பீர் கடுமையாகச் சாடினார்.
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சமீபத்தில் சென்ற ஷாகித் அஃப்ரீடி, “உலகமே கரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதை விட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை குவித்துள்ளார்” என்று கூற கம்பீர் கடுமையாக அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
கம்பீர் இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, “சிலருக்கு வயதுதான் ஆகிறதே தவிர மனத்தளவில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. அப்ரிடி இப்போதுதான் 16 வயது நபர் போல் பேசுகிறார். உலகமே கரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது காஷ்மீர் பற்றி பேசுகிறார் பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார், இது உங்களுடைய உங்கள் நாட்டுடைய எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இது துரதிர்ஷ்டமானது.
பாகிஸ்தானில் ஒருவர் மீது வெளிச்சம் விழ வேண்டுமென்றால் இந்தியாவையும் பிரதமரையும் திட்டினால் போதும். ஏழைகளுக்கு உணவு கொடுக்கச் சென்று விட்டு இப்படிப் பேசலாமா? உங்கள் நாட்டு நிலையை பாருங்கள், அங்கு பணம் இல்லை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
கரோனா காலத்திலும் எல்லை வழியாக பயங்கரவாதிகளை அனுப்புகிறீர்கள். கரோனா காலத்திலும் உங்கள் நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதம் செய்து வருகிறது.
கிரிக்கெட்டில் கூட உங்களை யாரும் சீரியசாகப் பேசுவதில்லை, இப்போது இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் உங்களை யாரும் மதிக்கப்போவதில்லை.” என்று அப்ரீடிக்கு கடுமையாகப் பதிலடி கொடுத்தார்.
இதனையடுத்து யுவராஜ் சிங், மோடிக்கு எதிரான அப்ரிடியின் கருத்தை ஏற்க முடியாது. மனித நேய அடிப்படையில்தான் அவரது முயற்சிக்கு உதவச்சொன்னேன் இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று ட்வீட் செய்ய இதனை மறுட்வீட் செய்த ஹர்பஜன் சிங் ஆம் இனி ஒருபோதும் இவருக்கு ஆதரவு கிடையாது என்று ட்வீட் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT