Published : 15 May 2020 09:00 PM
Last Updated : 15 May 2020 09:00 PM
தோனிதான் சக்திவாய்ந்த பேட்ஸ்மேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
2005-ம் ஆண்டு முதல் 2007 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டவர் கிரேக் சேப்பல். அப்போதைய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட மூத்த வீரர்களுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. அந்த இரண்டு வருடங்களும் சர்ச்சைக்குக் குறைவில்லாமல் இருந்தது. அதே நேரத்தில் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் வளர்ச்சி இவரது காலத்தில் தான் நடந்தது.
சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் உரையாடினார் கிரேக் சேப்பல். அப்போது அவர் பேசியதாவது.
"அவர் (தோனி) முதன் முதலில் பேட்டிங் செய்வதைப் பார்த்து நான் வாயடைத்துப் போனது எனக்கு நினைவிலிருக்கிறது. அப்போது இந்தியாவில் இருந்த பிரகாசமான எதிர்காலம் கொண்ட கிரிக்கெட் வீரர் அவர்தான். வழக்கத்துக்கு மாறான நிலையிலிருந்ததெல்லாம் அவர் பந்தை அடிப்பார். நான் பார்த்ததிலேயே மிக சக்திவாய்ந்த பேட்ஸ்மேன் தோனி தான்.
அவர் இலங்கைக்கு எதிராக அடித்த 183 ரன்கள் நினைவிலிருக்கிறது. எதிரணியை சிதைத்துவிட்டார். பலத்தைப் பிரயோகித்து ஆடப்பட்ட சிறந்த பேட்டிங் அது. அடுத்த ஆட்டம் புனேவில் இருந்தது. நான் தோனியிடம் 'எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு அடிக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு நீ ஏன் அதிகமாக தரையோடு சேர்த்து ஆடக்கூடாது' என்று கேட்டேன்.
அந்த போட்டியில் நாங்கள் 260 ரன் இலக்கை விரட்டிக் கொண்டிருந்தோம். வெற்றி பெறும் நிலையில் தான் இருந்தோம். சில நாட்களுக்கு முன் ஆடியதைப் போல அல்லாமல் நிதானமாக தோனி ஆடிக்கொண்டிருந்தார். வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்கிற நிலையில், சிக்ஸ் அடித்துக் கொள்ளலாமா என 12-வது வீரர் ஆர்.பி.சிங் மூலம் தோனி கேட்டனுப்பினார். தேவைப்படும் ரன்கள் ஒற்றை இலக்கத்துக்கு வரும் வரை அடிக்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பினேன். ஆறு ரன்கள் தேவை என்கிற நிலையில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.
ஆட்டத்தை முடிக்க முடியுமா என்று நான் அவரிடம் சவால் விடுவேன். வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுக்கும்போதெல்லாம் அவர் முகத்தில் பிரகாசமான சிரிப்பு இருக்கும். கிரிக்கெட் ஆட்டத்திலேயே மிகச்சிறந்த ஃபினிஷர் (finisher) தோனிதான்" என்று க்ரேக் சாபல் கூறியுள்ளார்.
கடைசியாக தோனி 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆடினார். சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல்லில் அவரது ஆட்டத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த வேலையில், கரோனா நெருக்கடி காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT