Last Updated : 13 May, 2020 09:01 PM

 

Published : 13 May 2020 09:01 PM
Last Updated : 13 May 2020 09:01 PM

ஐபிஎல் போட்டிகள் ஒன்றில் கூட விளையாட மாட்டேன் என நினைத்தேன்: ஜொஃப்ரா ஆர்ச்சர்

2018 ஐபிஎல் போட்டியில் தான் ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டோம் என்று நினைத்ததாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவருமான ஜொஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

2018 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.7.20 கோடிக்கு ஆர்ச்சரை எடுத்தது. ஆனால் ஆர்ச்சர் இங்கிலாந்துக்காக ஆடிய முதல் ஆட்டமே மே 2019ல் தான். அதற்கு முன் வரை பிக் பேஷ் உள்ளிட்ட டி20 தொடர்களில் மட்டுமே அவர் விளையாடியிருந்தார். தனக்கு சர்வதேச கிரிக்கெட் ஆடிய அனுபவம் இல்லை என்பதால் தான் ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் எந்தப் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்ததாகக் கூறியுள்ளார்.

"அன்று ஏலத்தில் பட்டியலில் இருந்த நான், டார்ஸி ஷார்ட், பென் மெக்டெர்மோ உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து அந்த நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்தோம். அப்போது என் கையில் இரண்டு மொபைல்கள் இருந்தன. ஒரு பக்கம் க்ரிஸ் ஜோர்டானிடமும், இன்னொரு பக்கம் என் பெற்றோரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு முன்பு தான் ஜோர்டானிடம், 'நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடியதில்லை. எனவே நான் ஒரு போட்டியில் கூட விளையாடப் போவதில்லை. என்னை அடிப்படை விலைக்கே எடுக்கப் போகிறார்கள். ஏதாவது ஒரு அணியில் கிரிக்கெட் விளையாடாமலேயே 8 வாரங்கள் இந்தியாவில் செலவிடப் போகிறேன்' என்று கூறியிருந்தேன்.

ஆனால் என் பெயர் வந்ததும் என்னை ஏலத்தில் எடுக்க ஒரு சில அணிகள் முன் வந்ததும், 'ஆஹா கண்டிப்பாக நாம் இந்தியா செல்லப் போகிறோம்' என்று நினைத்தேன். கண்டிப்பாக ஏதோ ஒரு அணியில் எடுக்கப்படுவோம் என்ற மகிழ்ச்சியும் இருந்தது. ஆனால் என்னை சற்று அதிக விலை கொடுத்தே ராஜஸ்தான் அணி வாங்கியதாக நினைக்கிறேன்.

எப்படியிருந்தாலும் அவர்களுக்கு நன்றி. அடுத்த சில மாதங்களில் நான் இந்தியாவுக்கு வந்தேன். அணியினரைச் சந்தித்தேன். இரண்டு வருடங்கள் ஆகின்றன. மூன்றாவது வருடமும் அணி வீரர்கள் தேர்வில் பெரிய மாற்றங்கள் இல்லை. பெரும்பாலும் நான் முதல் நாள் அன்று பார்த்தவர்கள்தான். மைய அணியை மாற்றாமல் இருப்பது அணிக்கு நல்லதுதான்" என்று ஆர்ச்சர் கூறியுள்ளார்.

இதுவரை இரண்டு ஐபிஎல் தொடர்களில் ஆடியுள்ள ஆர்ச்சர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2020 ஐபிஎல்லில் காயம் காரணமாக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கரோனா நெருக்கடி காரணமாக ஐபிஎல்லே ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த வருடத்தின் பிற்பாதியில் ஐபிஎல் நடந்தால் அதில் ஆர்ச்சர் பங்கேற்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x