Published : 13 May 2020 08:59 PM
Last Updated : 13 May 2020 08:59 PM
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளங்களையும் (பிட்ச்), விதிகளையும் சரிபார்க்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கருத்து கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று ஐசிசி ட்விட்டர் பக்கத்தில், சச்சின் - கங்குலி பார்ட்னர்ஷிப் இணை தான் இதுவரை அதிகம் ரன்கள் சேர்த்தது என்ற தகவலைப் பகிர்ந்திருந்தது. புதிய விதிகள் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு எடுத்திருப்போம் என சச்சின் கேட்க, அதற்கு கங்குலி இன்னும் 4000 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கலாம் என்று பதில் அளித்தார்.
தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிப்படி ஒரு ஆட்டத்தில் இரண்டு புதிய வெள்ளைப் பந்துகளைப் பயன்படுத்தலாம். அதேபோல மூன்று பவர் ப்ளேக்களைப் பின்பற்ற வேண்டும். முதல் பவர் ப்ளேவில் 30 கஜ வட்டத்தைத் தாண்டி இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே இருக்கலாம். 11-40 ஓவர்கள் வரை 4 ஃபீல்டர்கள் மட்டுமே இருக்கலாம். கடைசி 10 ஓவர்களில் ஐந்து ஃபீல்டர்கள் இருக்கலாம்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் புதிய ஒருநாள் போட்டி விதிகளை கடந்த சில வருடங்களாகவே விமர்சித்து வருகிறார். இப்படி இரண்டு புதிய பந்துகள் ஒருநாள் போட்டியில் பயன்படுத்தப்பட்டால் அது (பவுலர்களுக்கு) அழிவுக்காலம் என்றும், பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதையே பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று, சச்சின் - கங்குலி உரையாடலுக்கு பதில் போட்டிருந்த இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், "கண்டிப்பாக எளிதாக இன்னும் சில ஆயிரம் ரன்கள். இது ஒரு மோசமான விதி. ஐசிசியில் சில பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றால்தான் பேட்டிங்குக்கும் பவுலிங்குக்கும் சம அளவு முக்கியத்துவம் இருக்கும். 260/270 என்று எடுத்தால் தான் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இப்போதெல்லாம் அணிகள் மிக எளிதாக 320/30 என்று எடுத்து அந்த இலக்கு வெற்றிகரமாக விரட்டப்படுகிறது" என்று தன் ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார்.
இதற்குப் பதில் கூறியிருக்கும் டெண்டுல்கர், "நீங்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன் பஜ்ஜி. இந்த விதிகள், ஆடுகளங்கள் இரண்டையுமே சரிபார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT