Published : 12 May 2020 06:03 PM
Last Updated : 12 May 2020 06:03 PM
சர்வதேச டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் முகங்களில் ஒருவர் சரத் கமல். சென்னையைச் சேர்ந்த சரத் கமல், டேபிள் டென்னிஸில் விளையாட ஆண்டு முழுவதுமே பயணங்களில் இருக்கக்கூடியவர். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பதக்கம் வென்று தருவார் என்று கணிக்கப்பட்டுள்ளவர்களில் சரத் கமலும் ஒருவர். கரோனா ஊரடங்கால் சென்னையில் உள்ள இல்லத்திலேயே கடந்த இரு மாதங்களாக இருந்துவருகிறார்.
அவருடைய மினி பேட்டி:
‘டோக்கியா 2020’ ஒலிம்பிக் போட்டிக்காக கடந்த இரண்டு ஆண்டுகாலமாகவே முன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தீர்கள். ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டது உங்களைச் சோர்வடைய வைத்திருக்கிறதா?
பொதுவான பார்வையில் பார்க்கும்போது, கரோனா ஊரடங்கு என்பது சரியான முடிவு. நான் பிப்ரவரி மாதத்திலேயே இந்தியாவில் ஊரடங்கை எதிர்பார்த்திருந்தேன். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிக்குச் சென்று வந்ததிலிருந்தே ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியைத் தொடங்கிவிட்டேன். ஆசியக் கோப்பையில் பதக்கம் வென்றதால், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல முடியும் என்ற இலக்கை ஏற்படுத்திக்கொண்டேன். அப்போது தொடங்கி அதற்காக தொடர்ச்சியாக ஒர்க் அவுட் செய்து எல்லாப் பணிகளையும் முடித்து நெருக்கத்தில் வந்துவிட்டேன்.
ஆனால், எதிர்பாராதவிதமாக கரோனாவால் உலகமே ஊரடங்கில் உள்ளது. இப்போ மீண்டும் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராக வேண்டும் என்றால், எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்க வேண்டும். அதுதான் மனசுக்குக் கஷ்டமாக உள்ளது. எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு அதைச் செயல்படுத்த வேண்டும். அது எல்லாமே எனக்குச் சரியான திசையில் போனது. இப்போது மீண்டும் அதைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.
2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றீர்கள். 2021-ல் ஒலிம்பிக், 2022-ல் காமன்வெல்த் என அடுத்தடுத்து இரு பெரிய தொடர்கள் வருவது உங்கள் பயிற்சி அட்டவணையில் பாதிப்பை ஏற்படுத்துமா?
டேபிள் டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்தவரை பயிற்சியில் நெருக்கடி எதுவும் இருக்காது. ஒலிம்பிக் போட்டி முடிந்த பிறகு ஓய்வு எடுக்க உத்தேசித்திருந்தேன். ஆனால், ஒலிம்பிக் போட்டிக்குப் பின்பு கிடைத்திருக்க வேண்டிய ஓய்வு, இப்போதே கிடைத்துவிட்டது. எனவே, 2021 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, அப்படியே காமன்வெல்த் போட்டிக்கான பயிற்சியைத் தொடர வேண்டியதுதான். அப்படித் தொடர்வது சரியாகவும் இருக்கும். ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு 2022-ல் காமன்வெல்த், ஆசியப் போட்டிக்கான ஓட்டம் அப்படியே தொடரும். எனவே, அது கஷ்டமாக இருக்காது. ஒருவகையில் பார்த்தால் அது எனக்கு நல்லதும்கூட.
கடந்த இரு ஆண்டுகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் முன்னேற்றம் காட்டியிருந்தீர்கள்.. அது தொடருமா?
நிச்சயமாகத் தொடரும். அதற்கு ஃபெடரேஷனும் இந்திய விளையாட்டு ஆணையமும் உதவிகரமாக இருக்கிறது. டேபிள் டென்னிஸ் விளையாட்டில் நல்லதொரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இது டேபிள் டென்னிஸில் நல்ல வீரர்கள் உருவாக உதவிகரமாக இருந்துவருகிறது. என்னுடைய வளர்ச்சியிலும் இந்த அமைப்புகளுக்கு பங்குள்ளது. என்னைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக் போட்டியிலும்கூட நான் பதக்கம் வெல்வேன்.
எப்போது மீண்டும் பயிற்சியைத் தொடங்கப்போகிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை செப்டம்பர் இறுதி வரை எந்த சர்வதேச விளையாட்டுத் தொடர்களும் நடக்காது என்றே நினைக்கிறேன். எனவே எங்கும் போகவும் முடியாது. செல்லவும் நான் விரும்பவில்லை. எனவே, இன்னும் 3 மாதங்கள் வரை குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட எனக்கு நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் சென்னையிலேயே டேபிள் டென்னிஸ் பயிற்சியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். தவிர யோகா, தியானம், பயிற்சிகள் என தினமும் ஒர்க் அவுட்களில் ஈடுபட்டும் வருகிறேன்.
இவ்வாறு சரத் கமல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT