Published : 10 May 2020 05:36 PM
Last Updated : 10 May 2020 05:36 PM
இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, பல பிரபலங்களும் தங்கள் தாயை நினைத்து பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் உருக்கத்துடனும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய அதிரடி மன்னன், அற்புதன் என்று அழைக்கப்படும் விரேந்திர சேவாகும் தன் அன்னைக்கு உருக்கமாக மெசேஜ் தெரிவித்துள்ளார்.
அதாவது தன் அம்மாவின் மூலம்தான் தான் கருணை, அன்பு, நேயம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
“என் அம்மா என்னை என் ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கப்படுத்தினார். என்னை படி படி என்று வலியுறுத்தினார், ஆனால் என் கிரிக்கெட் அவருக்கு மகிழ்ச்சியளித்தது.
அவர் எனக்கு முன்பாக எழுந்திருந்து எனக்கு பரோட்டக்கள் செய்து கொடுப்பார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
எனக்கு மட்டுமல்ல என் சகா ஒருவர் எந்த உணவும் கொண்டு வர மாட்டார், ஆனால் களத்தில் பசியினால் மயங்கி விழுந்து விடுவார், என் அம்மா அவருக்கும் எனக்கும் சேர்த்து 8 பரோட்டாக்கள் செய்து கொடுப்பார்.
என் அம்மாவுக்கு அனைவர் மீதும் பாசம் அதிகம்” என்றார் சேவாக்.
சேவாகுக்கு முதன் முதலில் உள்ளூர் தச்சர் மூலம் கிரிக்கெட் மட்டை செய்து கொடுக்கப்பட்டது. ஒரு முறை மார்க் சரியாக வாங்காத போது மட்டும் தன் அம்மா அடித்ததாக சேவாக் தெரிவித்தார்.
ஒருமுறை காலையில் கிரிக்கெட் ஆடச் சென்ற சேவாக் இரவு வெகுநேரமாகியும் திரும்பவில்லை இதனால் கவலையடைந்த சேவாகின் அம்மா இருட்டிய பிறகும் வெளியே காத்திருந்தார். கோட்லாவில் ஒரு மேட்ச் ஆடிவிட்டு பிறகு பரிதாபாத் சென்று விளக்கொளி போட்டித் தொடர் ஒன்றில் பங்கேற்று விட்டு சேவாக் திரும்பினார்.
ஒருமுறை சேவாகின் நெருங்கிய உறவினர் ஒருவர் முதல் மாடியிலிருந்து குதித்தால் புது பேட் வாங்கித் தருவதாகப் பந்தயம் கட்ட பேடெ ஆசையில் மேலேயிருந்து குதித்து தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது. சேவாகின் அம்மா பதறிப்போய்விட்டார். இதனை தெரிவித்த சேவாக், “என் கடினகாலங்களிலெல்லாம் என்னுடன் இருந்து ஆறுதல் அளித்தவர் என் அம்மா, அவரால்தான் நான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்” என்றார் சேவாக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT