Published : 21 Aug 2015 09:42 AM
Last Updated : 21 Aug 2015 09:42 AM
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2-வது சுற்றில் பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான வாவ்ரிங்கா கடும் போராட்டத்துக்குப் பிறகு 3-6, 7-6 (3), 6-3 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் போர்னா கோரிச்சை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் வாவ்ரிங்கா தனது 3-வது சுற்றில் மற்றொரு குரேஷிய வீரரான இவா கார்லோவிச்சை சந்திக்கிறார்.
போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட் 7-6 (5), 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் தனாஸி கோகினாகிஸை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் குரேஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார் காஸ்கட்.
நோவக் ஜோகோவிச் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பெனாய்ட் பேரை வீழ்த்தினார். ஜோகோவிச் தனது 3-வது சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோபினை சந்திக்கிறார். பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-4, 7-6 (1) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மார்டி பிஷ்ஷையும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியையும் வீழ்த்தினர். அடுத்த சுற்றில் முர்ரே, பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவையும், நடால், சகநாட்டவரான ஃபெலிஸியானோ லோபஸையும் சந்திக்கின்றனர்.
செரீனா, பென்சிச் முன்னேற்றம்
மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் பல்கேரியாவின் ஸ்வெட்டானா பைரன்கோவாவையும், ருமேனியாவின் சைமோனா ஹேலப் 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கிறிஸ்டினாவையும், ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பிளேவியா பென்னட்டாவையும், பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-0, 6-4 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியையும் தோற்கடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT