Published : 09 May 2020 10:25 AM
Last Updated : 09 May 2020 10:25 AM

நீங்கள் எதிர்கொண்ட ஆகச்சிறந்த பந்து இதுதானா? - வீடியோ வெளியிட்டு கோலியிடம் கேட்ட இங்கிலாந்து

2018 இங்கிலாந்து தொடரின் ஒருநாள் போட்டி ஒன்றில் விராட் கோலி 71 ரன்களில் பிரமாதமாக பேட் செய்து வந்த போது லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷீத்திடம் பவுல்டு ஆனார்.

இங்கிலாந்து எப்போதுமே ஷேன் வார்னின் கனவுப்பந்தில் மைக் கேட்டிங் பவுல்டு ஆனதற்கு இணையான தங்கள் நாட்டு பவுலர்களின் சிலபல பந்துகளைக் குறிப்பிட்டு சமாதானம் அடைவது வழக்கம்.

கிரகாம் ஸ்வான் ஒருமுறை ரிக்கி பாண்டிங்கை பவுல்டு செய்ததை ‘நூற்றாண்டின் சிறந்த பந்து இது’ என்று கொண்டாடினார்கள். ஆனால் ஹர்பஜன் சிங் ஒருமுறை இடது கை ஆஸி. வீரர் மைக் ஹஸிக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே பிட்ச் செய்து தூஸ்ராவை உள்ளே கொண்டு சென்ற பந்து ஹசியின் அதிர்ச்சிக்கிடையே பவுல்டு ஆனது. இந்தப் பந்து உண்மையில் ஸ்வான் பந்தை விட மிகப்பெரியது.

அந்த வகையில் விராட் கோலியை ஒருநாள் போட்டி ஒன்றில் லெக் பிரேக்கில் பவுல்டு செய்த ஆதில் ரஷீத் பந்தின் வீடியோவை வெளியிட்டு, ‘நீங்கள் எதிர்கொண்டதிலேயே இதுதான் சிறந்த பந்தோ?’ என்று கேட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோலிக்கு வினா எழுப்பியுள்ளது.

அந்த இன்னிங்சில் கோலி தனது 36வது சதத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆதில் ரஷீத் ஒரு பந்தை லெக் அண்ட் மிடில் பிட்ச் ஆக்கி திருப்பினார் கோலி தவறான லைனில் ஆடியதால் பந்தை கோட்டை விட்டு பவுல்டு ஆனார். ஸ்லாக் ஸ்வீப் ஆடத்தெரிந்திருந்தால் அது எங்காவது பறந்திருக்கும், கோலி பின் காலில் சென்று அதை ஆன் திசையில் தட்டி விட முயன்றார் பவுல்டு ஆனார். தவறான ஷாட், தவற விட்டால் பவுல்டு என்ற ரக பந்துதான், ஆனால் இங்கிலாந்துக்கு இது பெரிய பந்து.

அந்தத் தொடரில் விராட் கோலி 3 முறை ஸ்பின்னர்களிடம் அவுட் ஆனார். இருமுறை ரஷீத்திடமும் 1 முறை மொயின் அலியிடமும் ஆட்டமிழந்தார் கோலி, ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழப்பது அப்போது முதல் விராட் கோலியின் வாடிக்கையாக மாறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x