Published : 04 May 2020 05:06 PM
Last Updated : 04 May 2020 05:06 PM
நான் ஆடிய போது கிரிக்கெட் உலகை ஒரு உலுக்கு உலுக்கினேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆசிப் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி சிறை சென்றதை அவர் கூறவில்லை, தன் பந்து வீச்சின் மூலம் கிரிக்கெட் உலகை உலுக்கினாராம் இவர்.
முகமது ஆசிப் என்றால் அவர் வீசிய பிரமாதமான பந்து வீச்சுகள் நினைவுக்கு வருவதோடு, 2007 டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் திடீரென தோனியினால் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட யூசுப் பதான் ப்ளே என்றவுடன் ஆசிப்பை நேராக அடித்த சிக்ஸை மறக்க முடியுமா?
இங்கிலாந்தின் பிரமாதமான பேட்ஸ்மென் கெவின் பீட்டர்சன், தன் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான் என்று புகழாரம் சூட்டியது நினைவு கூரத்தக்கது.
ஆனால் இவர் மிகப்பெரிய பவுலர், கிளென் மெக்ராவுடன் ஒப்பிடப்பட்டவர், பணத்தாசையின் தூண்டுதலினால் சூதாட்டத்தில் சிக்கி இவர், சல்மான் பட், மொகமது ஆமிர் இங்கிலாந்தில் சிறைத்தண்டனை பெற்று பாகிஸ்தான் நாட்டுக்கே பெரிய அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்.
அவர் இப்போது தன்னைப் பற்றி கூறும்போது, “என் கிரிக்கெட் வாழ்க்கையை கொஞ்ச நன்றாக முடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கும் வருத்தங்கள் உள்ளன. அது வேறு கதை, என்னைப் பொறுத்தவரை எது நடந்ததோ அது நடக்க வேண்டியதுதான். அது பரவாயில்லை.
என்ன நடந்ததோ அது வரலாறு. ஆனால் நான் விளையாடிய வரையில் என்னைப் பற்றி பேசவைத்தேன். அதுதான் எனக்கு சிந்திக்க வேண்டியதில் முக்கியமானது. உலகை என் பந்து வீச்சின் மூலம் ஒரு உலுக்கு உலுக்கினேன். இன்றும் கூட சிறந்த பேட்ஸ்மென்கள் என் பவுலிங்கைப் பற்றிப் பேசுகின்றனர், என்னை நினைவில் கொண்டுள்ளனர்.
எனக்கு முன்னதாக 2010-ல் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், எனக்குப் பிறகும் சூதாட்டம் ஆடியுள்ளனர். ஆனால் இவர்களெல்லாம் ஆடி வருகின்றனர். இரண்டாம் வாய்ப்பை எனக்கு மட்டும் பிசிபி வழங்கவில்லை. என்னை நடத்தியது போல் சிலரை பாக். கிரிக்கெட் வாரியம் நடத்தவில்லை.
உலகில் அனைவரும் என் பவுலிங்கை பெரிய அளவில் பாராட்டிய போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை காப்பாற்றாமல் கைவிட்டு விட்டது.” என்றார் ஆசிப்.
நல்ல பவுலர் 23 டெஸ்ட், 38 ஒருநாள் போட்டிகள், 11 டி20 சர்வதேசப் போட்டிகளில் அவர் மொத்தம் 165 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எண்ணிக்கை அல்ல ஆசிப். ஆசிப் என்றால் அவரது லெந்த், ஸ்விங், பவுன்ஸ், பந்தை இறக்கும் இடம் ஆகியவை இன்னும் கண்களை விட்டு அகலாதவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT