Published : 25 Apr 2020 03:26 PM
Last Updated : 25 Apr 2020 03:26 PM
தி மைண்ட் பிஹைண்ட் என்ற தொலைக்காட்சித் தொடரின் 5ம் அத்தியாயத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் லாக் டவுன் கால நடவடிக்கைகள், ஐபிஎல் அனுபவம், கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்கள் ஆகியவை பற்றி மனம் திறந்து பேசினார்.
“நானும் என் குடும்பமும் பெங்களூருவில் பாதுகாப்பாக இருக்கிறோம். என்னால் என்ன முடியுமோ அதைச் செய்து வருகிறேன். அதாவது பயிற்சி உள்ளிட்டு என்னை நான் பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆம், வீட்டில் நேரம் செலவழிப்பது நன்றாகத்தான் உள்ளது. கிரிக்கெட் இருக்கும் போது இடைவெளிக்காக ஏங்குவோம். ஆனால் இப்போது இடைவெளி அதிகமாக உள்ளது, இவ்வளவு பெரிய இடைவெளியை நாங்கள் விரும்பவில்லை.
இதுதான் இந்தக் காலம் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடமாகும். வாழ்க்கையின் முக்கிய அம்சம் ஆரோக்கியமாக இருப்பது, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதாகும். என் பிறந்த தினத்தை என் குடும்பத்தினருடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொண்டாடினேம், எனவே இது சிறப்பான தருணம்.
எந்தப் போட்டியையாவது மாற்ற விருப்பமா என்றால் அது உலகக்கோப்பை அரையிறுதிதான். அந்தத் தோல்வியிலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. சில வேளைகளில் தோல்வி எங்களை பயமுறுத்தும். மூத்த வீரர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நன்றாக ஆடி வந்த நிலையில் அரையிறுதியில் தோல்வி ஜீரணிக்க முடியாததகா இருந்தது. எனவே சில வேளைகளில் அந்தத் தோல்வியின் துர்கனவுடன் தான் எழுந்திருக்க வேண்டியிருக்கிறது.
யாருக்காகவாவது வாழ்க்கை முழுதும் பேட் செய்வீர்களா என்று கேட்டால் விராட் கோலிக்காக என்றே கூறுவேன், எங்களுக்கிடையே மிகப்பெரிய நட்பு இருக்கிறது. எனக்காக அவர் எதை வேண்டுமானாலும் கொடுப்பார்.
என்னைப்பற்றி நான் புரிந்து கொண்டதையே மாற்றிய இன்னிங்ஸ் சிட்னி சதம்தான். சர்வதேச கிரிகெட்டில் விரைவில் மீண்டெழுவது ஒவ்வொரு வீரருக்குமான கனவாகும். அந்தச் சதம் பிரமாதமானது. நான் மனது வைத்தால் நாம் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று என்னை உணரவைத்த சதமாகும் அது. அந்த இன்னிங்ஸ் என் கிரிக்கெட் கேரக்டரையே மாற்றியது.
சமூக ஊடகங்கள் தனிமனித துவேஷத்தில் இறங்கக் கூடாது. நம் குடும்பத்தினரை காயப்படுத்தும் போது நாம் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் மக்கள் விரைவில் நாங்களும் அவர்களைப் போல்தான் என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன். சிறப்பான முறையில் பங்களிக்கிறோம், கடினமாக ஆடுகிறோம், சில வேளைகளில் உறக்கமற்ற இரவுகள் ஆகி விடுகிறது. குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கிறோம் இதை அவர்களும் அனுபவிப்பவர்கள்தானே” என்றார் கே.எல்.ராகுல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT