Published : 24 Apr 2020 02:54 PM
Last Updated : 24 Apr 2020 02:54 PM
மைதானத்தில் பார்வையாளர்கள் இன்றி விளையாடுவது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிதாக இருக்காது என்றும், அவர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை அப்படித்தான் விளையாடியுள்ளார்கள் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
கரோனா நெருக்கடியால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் தொடர் நடக்குமா நடக்காதா என்ற நிலையில், ஒரு வேளை நடந்தாலும், பார்வையாளர்கள் இல்லாமல் தான் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி பேசியுள்ள தினேஷ் கார்த்திக், "எங்களில் பலர், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை, பார்வையாளர்கள் இல்லாத மைதானங்களில் தான் விளையாடி வளர்ந்திருக்கிறோம். எனவே அது எங்களுக்குப் புதிதாக இருக்காது. கண்டிப்பாக அது வித்தியாசமாக இருக்கும் ஏனென்றால் ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் இன்றி நாங்கள் விளையாடியதில்லை. ஆனால் யாருமே பார்க்காமல் தான் உள்ளூர் போட்டிகளை ஆடியுள்ளோம்" என்று கூறினார்.
மேலும், வர்ணனையாளர்கள் பேசுவது சில பேசும் கருத்துகள் சர்ச்சைக்குரியதாக மாறுவது பற்றிப் பேசியுள்ள கார்த்திக், "வர்ணனையாளர்கள் பேசுவது பல வீரர்களைக் காயப்படுத்தும். ஆனால் உங்கள் ஆட்டத்தைப் பற்றித்தான் பேசுகிறார்களே தவிர உங்களைப் பற்றி அல்ல. மேலும், அவர்கள் உங்கள் ஆட்டத்தைப் பற்றிப் பேசவில்லையென்றால் நீங்கள் ஆட்டத்தில் தேவையற்றவர் என்பதே என் எண்ணம்
ஒருமுறை இயான் சேப்பலிடம் ஒரு வீரர் சென்று, 'ஏன் என்னைப் பற்றி அப்படிப் பேசினீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'என் வேலை பேசுவது, உங்கள் வேலை விளையாடுவது, நாம் நம் வேலைகளை மட்டும் பார்ப்போம்' என்று பதிலளித்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு பிடித்தமான மைதானம் ஈடன் கார்டன்ஸ் என்று கூறியுள்ளார் கார்த்திக், எந்த மைதானத்தில் நாம் நன்றாக விளையாடுகிறோமா அது நமக்கு அதிகம் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT