Last Updated : 21 Apr, 2020 08:41 PM

 

Published : 21 Apr 2020 08:41 PM
Last Updated : 21 Apr 2020 08:41 PM

நான் சச்சினைப் போல விளையாட முயற்சிக்கிறேன், அவர் கிரிக்கெட்டின் கடவுள்: ப்ரித்வி ஷா

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட்டின் கடவுள் என்று கூறியுள்ள ப்ரித்வி ஷா தான் அவரைப் போல ஆட முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.

தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் ப்ரித்வி ஷா. இந்தியாவுக்காக 20 வயதில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியபோது சதமடித்தார். அதற்கு முன் தனது 17-வது வயதில், துலீப் கோப்பை போட்டியில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதற்கு முன் அந்த சாதனைக்கு உரியவர் சச்சின் டெண்டுல்கர்.

அப்போதிலிருந்தே பலர் ப்ர்த்வி ஷாவை சச்சினுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தான் விளையாடும் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நேரலையில் பேசிய ப்ரித்வி ஷாவிடம் இது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய ஷா, "சச்சின் என் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். எனது எட்டாவது வயதில் நான் முதலில் அவரை சந்தித்தேன். எனது இயல்பான ஆட்டத்தைச் சூழலுக்குத் தகுந்தாற் போல எப்போதும் ஆடச் சொல்வார். மைதானத்துக்கு வெளியேயும் அமைதி காக்கும்படி சொன்னார்.

பேட்டை பிடிக்கும் போதே கீழே இருக்கும் கையில் தான் எனக்கு வலு அதிகம். எனவே என் க்ரிப்பை மாற்ற வேண்டாம் என்று சச்சின் ஒருமுறை சொன்னார். அதற்கு முன்பு வரை எனது பயிற்சியாளர்கள் சொன்னதன் பேரில் அடிக்கடி என் க்ரிப்பை மாற்றியிருக்கிறேன். சச்சின் சொன்ன பிறகு நான் மாற்றவில்லை.

அவரோடு என்னை ஒப்பிடும்போது அழுத்தத்தை உணர்வேன். ஆனால் அதைச் சவாலாக எடுத்துக் கொள்கிறேன். நான் அவரைப் போல விளையாட முயற்சிக்கிறேன். அவர் கிரிக்கெட்டின் கடவுள்" என்று கூறினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் சவுரவ் கங்குலியின் கீழ் பயிற்சி எடுத்ததைப் பற்றிப் பேசுகையில், "நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அவர் நிறைய உதவினார். அணியில் இளைஞர்களை எப்படி ஊக்குவிப்பது என்பது அவருக்குத் தெரியும். மிகச் சிறந்த அனுபவம்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x