Published : 23 May 2014 04:48 PM
Last Updated : 23 May 2014 04:48 PM

மாநில கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் உண்மையில் ஊக்குவிக்கிறதா?- பாபா அபராஜித்தை முன் வைத்து ஓர் அலசல்

ஐபிஎல்.கிரிக்கெட் 2008ஆம் ஆண்டு உருவானபோது நிறைய இளம் வீரர்கள் இந்தியாவுக்கு விளையாடும் தங்கள் கனவு நனவாகும் என்றே நம்பினர். ஆனால் ஐபிஎல். கிரிக்கெட்டில் தங்கள் மாநிலத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அணியிலேயே இடம்பெற முடியாமல் போகும் என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உதாரணத்திற்குக் கூறவேண்டுமென்றால் கர்நாடகாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஒரு உள்ளூர் வீரர் கூட இல்லை. சென்னை அணியில் 3 பேர் உள்ளூர் வீரர்கள் இருக்கின்றனர். அஸ்வின் இந்தியாவுக்கு விளையாடி வரும் வீரர் எனவே அவரை விட்டுவிடுவோம். மீதி வீரர்கள் யார் என்றால் பாபா அபராஜித் ஒருவர் விஜய் சங்கர் மற்றொருவர்.

இதில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் எதிராகால இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக வருவார் என்று கிரிக்கெட் நிபுணர்களால் அறுதியிடப்பட்ட பாபா அபராஜித் இன்னமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவில்லை. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற பிறகும் பெஞ்சில் உள்ள அபராஜித்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்ட்ரேலிய அணியிலேயே தூக்கி எறியப்பட்ட டேவிட் ஹஸ்ஸிக்கு வாய்ப்பு அளிக்கபப்ட்டு வருகிறது. இவரது பந்து வீச்சினால் ஒரு போட்டியை சென்னை இழந்தும் உள்ளது. ஆனால் கேப்டன் தோனி ஏன் அவருக்கு ஓவர் கொடுத்தார் என்பதை வர்ணனையாளர் டேனி மாரிசனிடம் கூறுகையில், டேவிட் ஹஸ்ஸி வர்ணனையாளராக இருக்கும்போது பந்தை எந்த லெந்த்தில் எப்படி வீசவேண்டும் என்றெல்லாம் கூறினார் எனவே அவர் தானே வீசும்போது என்ன செய்கிறார் பார்ப்போம் என்று கொடுத்ததாக ஜோக் அடித்தார்.

அபராஜித்திற்கு தொடர்ந்து வாய்ப்பளிக்காதது புரியாத புதிராகவே உள்ளது. அண்டர் - 19 இந்திய அணியிலிருந்து வந்தவர்தான் தோனியும். கோலியும் அவ்வாறுதான், 19வயது வீரரான பாபா அபராஜித் ஆஸ்ட்ரேலியாவில் உன்முக்த் சந்த் தலைமையில் இந்தியா ஜூனியர் உலகக் கோப்பையை வென்றபோது இறுதிப்போட்டி மட்டுமல்லாது தொடர் முழுதும் தனது ஆல்ரவுண்ட் திறமைகளை நிரூபித்தவர். தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்க வேண்டிய அளவுக்கு அவரது ஆட்டம் அமைந்தது.

மேலும் முதல் தர கிரிக்கெட்டில் பாபா அபராஜித் 24 போட்டிகளில் 52.77 என்ற சராசரியுடன் 1425 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள், 4 அரைசதங்கள். தெற்கு மண்டலத்திற்காக இவரும் மணீஷ் பாண்டேயும் இரட்டை சதம் விளாசியுள்ளார்கள். இவரது மற்றொரு சதத்தினால் தெற்கு மண்டலம் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. அறிமுக போட்டியிலேயே இரட்டைச் சதம் கண்டவர் பாபா அபராஜித்.

ராகுல் டிராவிட், பாபா அபராஜித்தைப் பாராட்டியுள்ளார். இருவரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முதல் டிவிஷன் இறுதிப்போட்டியில் சேர்ந்து ஆடியுள்ளனர். அப்போது பாபா அபராஜித் சதம் அடித்ததோடு ஸ்லிப்பில் டிராவிடுடன் சேர்ந்து பீல்டிங் செய்த அனுபவத்தையும் பெற்றுள்ளார்.

தோனி முன்பெல்லாம் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவார். சென்னை அணியிலேயே பத்ரிநாத், வித்யூத் சிவராமகிருஷ்ணன், அனிரூத் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளார்.

இன்னமும் பாபா அபராஜித்திற்கு வாய்ப்பு அளிக்காதது ஏன் என்று புரியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி உள்ளது என்றால் கர்நாடகா நிலைமை இன்னும் மோசம். ஒரு மாநில கிரிக்கெட் வீர்ர் கூட அந்த அணியில் இடம்பெறவில்லை.

மாநில அணியின் சிறந்த வீரர்களான உத்தப்பா, மணீஷ் பாண்டே, வினய் குமார் உள்ளிட்டோர் வேறு வேறு அணிகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகின்றனர். இளம் வீர்ர் சி.எம். கவுதம் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வருகிறார். ஒரு சில நல்ல இன்னிங்ஸ்களையும் அவர் நடப்பு ஐபிஎல். கிரிக்கெட்டில் ஆடியுள்ளார்.

ராஜஸ்தான் அணியில் 2008ஆம் ஆண்டு ஷேன் வார்ன் தனது கேப்டன்சியில் நிறைய மாநில வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். ஆனால் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரேயொரு வீரர்தான் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு வீரர்கள் விளையாடும் ஐபிஎல். கிரிக்கெட் போட்டியில் மொத்தம் தற்போது 24 வீரர்களே அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாநில ஐபிஎல் பிரதிநிதித்துவ அணியில் இடம்பெற்றுள்ளனர். இது நிச்சயம் போதாது!!

ஐபிஎல். கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்ற உத்வேகம், ஆசை இளம் வீரர்களுக்கு அதிகம் இருக்கும் ஏனெனில், ஒவ்வொரு ஆட்டத்திற்கும் நல்ல கூட்டம் வருகிறது. தொலைக்காட்சியிலும் அதிகம் பேர் பாக்கின்றனர். மேலும் உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளர்களையும், சிறந்த பேட்ஸ்மென்களையும் எதிர்கொண்டு நிரூபிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆனால் உள்ளூர் வீரர்கள் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படாமலோ, தேர்வு செய்யப்படமாலோ புறக்கணிக்கப்பட்டால் ஐபிஎல். கிரிக்கெட்டினால் இந்திய கிரிக்கெட்டிற்கு எந்த வித பயனும் இல்லாமலே போய்விடும், ஆகவே அணி கேப்டன்களும், ஐபிஎல் நிர்வாகமும் இந்திய கிரிக்கெட்டை கவனத்தில் கொண்டு அணித் தேர்வுகளை நிகழ்த்தவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x