Published : 14 Apr 2020 11:57 AM
Last Updated : 14 Apr 2020 11:57 AM
கரோனா நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடலாம் என்று ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்ததோடு பாகிஸ்தானுக்காக இந்தியா 10,000 வெண்ட்டிலேட்டர்களைத் தயாரித்துக் கொடுத்தால் ஜென்மத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருப்போம் என்ற ரீதியில் பேசினார்.
அதற்குக் கபில்தேவ் இது கிரிக்கெட் ஆடும் நேரமில்லை, வீரர்களை கரோனா ஆபத்தில் சிக்கவைக்கலாமா? என்றும் மனித உயிரை விட கிரிக்கெட் முக்கியமல்ல என்று சாடினார், ஆனால் அக்தருக்கு அவர் கருத்தைக் கூற உரிமை இருக்கிறது என்று அங்கீகரித்தார்.
ஆனால் ஷாகித் அஃப்ரீடி, கபில்தேவ் தன் கருத்தைக்கூறுகிறார் என்ற குறைந்தபட்ச ஜனநாயகம் கூட இல்லாமல் கபில்தேவை விமர்சித்துள்ளார்.
“உலகமே கரோனாவை எதிர்த்துச் சண்டையிட்டு வருகிறது, நம் பகுதியில் நம்மிடையே ஒற்றுமை வேண்டும். கபில்தேவின் எதிர்மறையான கருத்துக்கல் உதவாது. ஷோயப் அக்தர் கூறியதில் நான் எந்தத் தவறையும் காணவில்லை.
கபிலின் எதிர்வினை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரிடமிருந்து இன்னும் நல்லதாக எதிர்ப்பார்த்தேன், இது போன்ற இக்கட்டான தருணத்தில் கபில் இப்படி பேசியிருக்கக் கூடாது என்று கருதுகிறேன். விளையாட்டு மனிதர்களை ஒன்று சேர்க்கும் பாலம். கபில் பேச்சு ஏமாற்றமளிக்கிறது” என்றார் ஷாகித் அப்ரீடி.
அக்தரும் “நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கபில் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அனைவருமே பொருளாதார ரீதியாகப் பொறியில் சிக்கப் போகிறார்கள். அதற்காகத்தான் வருவாய் திரட்ட வேண்டும் என்றேன் நான் பரந்துபட்ட பார்வையில், பொருளாதார சீர்த்திருத்தம் பற்றி பேசினேன்.
உலகப் பார்வையாளர்கள் ஒரே போட்டியில் கவனம் செலுத்துவார்கள் இதன் மூலம் வருவாய் உற்பத்தியாகும், ஆனால் கபில் பணம் இருக்கிறது என்கிறார், ஆம் அவருக்குத் தேவையில்லை, ஆனால் மற்றவர்களுக்குத் தேவையில்லையா. எனவே இது விரைவில் பரிசீலிக்கப்படும் என்று நினைக்கிறேன்.
நான் நிறைய பயணித்திருக்கிறேன் மக்களுடன் உரையாடியிருக்கிறேன், இந்தியர்களைப் பற்றி உயர்வாகப் பேசி வருகிறேன். நம் நாடுகளில் வறுமை நிலவுகிறது. மக்கள் துயரம் என்னை துன்பப்படுத்துகிறது, மனிதனாகவும் முஸ்லிமாகவும் உதவுதது என் பொறுப்பு.
அடுத்த 6 மாதங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்றால் என்ன தெரிவுகள் உள்ளன என்பதைப் பற்றித்தான் நான் பேசினேன். கிரிக்கெட்டினால் வேலை கிடைக்கப்பெற்றோர் என்ன செய்வார்கள்? கிரிக்கெட் மூலம் வாழ்வாதாரம் பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? எனவே நிதி திரட்டும் போட்டி நடத்துவதுதான் ஒரே வழி.
இது இரு நாடுகளிடையே உறவுகள் மேம்படவும் வழிவகை செய்யும் என்ற பரந்துபட்ட பார்வையில் நான் பேசுகிறேன்” என்றும் ஷோயப் அக்தர் நியூஸ் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT