Published : 31 Aug 2015 04:42 PM
Last Updated : 31 Aug 2015 04:42 PM

கோலிக்கு பிறகு அருமையான பேட்டிங்: இந்தியா 274 ஆல் அவுட்; 385 ரன்கள் முன்னிலை

கொழும்பு டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணி தன் 2-வது இன்னிங்சில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 385 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

386 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இலங்கை களமிறங்கி தரங்கா, கருணரத்னே விக்கெட்டுகளை இழந்தது. இன்று இன்னமும் குறைந்தது 20 ஓவர்களையாவது இலங்கை அணி எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

ரோஹித் சர்மா அரைசதம் எடுத்து தேவையில்லாத ஷாட்டில் அவுட் ஆன பிறகு, பின்னி (49), நமன் ஓஜா (35), அமித் மிஸ்ரா (39), அஸ்வின் (58) ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் இந்தியா 274 ரன்களை எடுக்க முடிந்தது.

இன்று காலை 21/3 என்ற நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா களமிறங்கினர். தம்மிக பிரசாத், நுவான் பிரதீப் இன்றும் அருமையாக வீசினர், குறிப்பாக பிரசாத், ஆஃப் ஸ்டம்ப்புக்கு சற்று வெளியே பிட்ச் செய்து உள்ளேயும், வெளியேயும் ஸ்விங் செய்தது இந்திய பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி கொடுத்தது, குறிப்பாக கோலி சவுகரியமாக ஆடவேயில்லை.

ரோஹித் சர்மா அருமையான டிரைவ்களையும் புல்ஷாட்களையும் ஆடினார். ஆனாலும் 25-வது ஓவரில் அவர் அடித்த 2 பவுண்டரிகள் அவரது ரன் எடுப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. கோலி, பிரசாத்தை ஒரு அருமையான பவுண்டரியும் பிறகு மேத்யூஸை ஒரு லெக் திசை பவுண்டரியும் அடித்தார்.

இந்நிலையில் இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 57 ரன்கள் சேர்த்த நிலையில் 21 ரன்கள் எடுத்த கோலி நுவான் பிரதீப் நன்றாக தள்ளி வீசிய ஆஃப் ஸ்டம்ப் வெளியே சென்ற பந்தை தடுத்தாடும் எண்ணத்தோடு ஆட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு தரங்காவிடம் கேட்ச் ஆனது. முதல் இன்னின்ஸில் ஆட்டமிழந்தது போலவே இப்போதும் ஆட்டமிழந்தார். தடுத்தாடும் போது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துக்கு மட்டையை ஒருமாதிரி திருப்பி வைத்தே ஆடுகிறார் கோலி இதுதான் அவரது பிரச்சினை. தடுத்தாடும் போது மட்டை லெக் ஸ்லிப் திசையிலிருந்து வர வேண்டும், ஆனால் கோலிக்கு மட்டை ஆஃப் திசையில் ஸ்லிப் திசையிலிருந்து வருகிறது, இதுதான் அவரது கோணலான தடுப்பாட்டத்துக்குக் காரணம்.

பிறகு பின்னி களமிறங்கி மிட்விக்கெட்டில் ஒரு அருமையான பவுண்டரி அடிக்க, அதே நுவான் பிரதீப் ஓவரில் ரோஹித் 2 பவுண்டரிகளை அடித்தார்.

ரோஹித் சர்மாவும், பின்னியும் இணைந்து 54 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். 72 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்திருந்த ரொஹித் சர்மா பிரசாத் வீசிய லெக் திசை ஷார்ட் பிட்ச் பந்தை சரியான நிலையில் இல்லாது புல் ஆட அது நேராக லாங் லெக் திசையில் கேட்ச் ஆனது, பிரதீப் தலைக்கு மேல் அதனை பிடித்தார். உணவு இடைவேளையின் போது இந்தியா 132 ரன்களில் இருந்தது, அதாவது 21/3 என்பதிலிருந்து 111 ரன்களை எடுத்தது இந்தியா.

பின்னி, நமன் ஓஜா இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 42 ரன்களைச் சேர்த்தனர். பின்னி 62 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து பிரசாத்தின் விட்டு விட வேண்டிய பந்தை நன்றாக முன்னால் வந்து ஆட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு பின்னால் கேட்ச் ஆனது.

நமன் ஓஜா மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆடினார், உறுதியுடன் ஆடினார், அவரது பேட்டிங்கில் அழுத்தம் தெரியவில்லை, அவர் கவலைப்படாமல் ஆடி 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் பங்களிப்பு செய்து ஹெராத் பந்தில் அவுட் ஆனார்.

அதன் பிறகு மிஸ்ரா, அஸ்வின் இணைந்து மிக முக்கியமாக 8-வது விக்கெட்டுக்காக 55 ரன்களை 16 ஓவர்களில் சேர்த்தனர். மிஸ்ரா மீண்டும் தனது உறுதியான பேட்டிங்கை காண்பித்து 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். சில்வாவின் த்ரோவுக்கு இரையானார்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு அஸ்வின் சில பிரமாதமான, களவியூகத்தை நகைப்புரியதாக்கும் சில பவுண்டரிகளை அடித்து 58 ரன்களில் கடைசியாக பிரசாத்திடம் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் பிரதீப் பந்தில் 4 ரன்களில் வீழ்ந்தார். இந்தியா 274 ரன்களுக்கு சுருண்டது.

மொத்த முன்னிலை 385 ரன்கள். பிரசாத் 4 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சர்ச்சையில் இசாந்த் சர்மா:

இடையே இசாந்த் சர்மாவுக்கும் இலங்கை வீரர்களுக்கும் இடையேயான கசப்புணர்வு தலை தூக்கியது, இசாந்த் சர்மா பேட்டிங் செய்த போது, 1 ரன்னுக்காக ஓடினார், அப்போது தனது ஹெல்மெட்டைக்காட்டி, ஹெல்மெட்டுக்கு வீசுமாறு பிரசாத்த்துக்கு சுட்டிக்காட்டியது போல் தெரிந்தது. உடனே இசாந்தை தம்மிக பிரசாத் முறைக்க, சந்திமால், அஸ்வின் ஆகியோர் அருகில் வர மேத்யூஸ் நடுவர்கள் என்று விவகாரமானது. இந்திய அணி ஆல் அவுட் ஆன பிறகும் கூட நடுவர்கள் மேத்யூஸிடம் சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தனர். இசாந்த் நாட் அவுட்டாக பெவிலியன் திரும்பிய போது அவருடன் பேசுவதற்காக தம்மிக வேகமாகச் சென்றார்.

ஏற்கெனவே மோசமான நடத்தைக்காக இசாந்த் மீது புகார் இருக்க, நேற்று மற்றும் இன்றைய அவரது நடத்தை விவகாரமாகியுள்ளது. நடுவர்கள் கோலியுடன் கூட நீண்ட நேரம் விவாதித்தனர். இதுவும் இசாந்த் சர்மா விவகாரமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உப்புல் தரங்கா, ரன் எடுக்காமல், இசாந்தின் அருமையான பந்துக்கு நமன் ஓஜாவிடம் எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் கருண ரத்னேயை, உமேஷ் யாதவ் சற்று முன் வீழ்த்தினார். ஓஜாவின் கேட்ச்சுக்கு அவர் ஆட்டமிழந்தார்.

தொடக்கத்தில் இறங்கிய கவுஷல் சில்வா 1 ரன்னுடன் களத்தில் உள்ளார். சண்டிமால் இறங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x