Published : 08 Apr 2020 10:48 AM
Last Updated : 08 Apr 2020 10:48 AM
இந்திய அணியின் இப்போதைய பண்பாடு குறித்து இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மாவுடன் முன்னாள் இடது கை நட்சத்திரம் யுவராஜ் சிங் உரையாடும் போது விமர்சனம் முன்வைத்தார்.
அதாவது இப்போதைய இந்திய அணியில் போதிய ரோல்-மாடல்கள் இல்லை, மாறாக தன் காலத்தில் சச்சின் திராவிட், கங்குலி, லஷ்மண் போன்ற ரோல்-மாடல்கள் இருந்தனர் என்கிறார் யுவராஜ் சிங்.
ரோஹித் சர்மா உரையாடலின் போது நடப்பு இந்திய அணிக்கும் யுவராஜ் சிங் வந்த போது இருந்த இந்திய அணிக்குமான வித்தியாசத்தை கேட்ட போது, “நான் அணிக்குள் வந்த போது, அல்லது நீ அணிக்குள் வந்த போது நம் மூத்த வீரர்கள் ஒழுக்கமாக கட்டுக்கோப்புடன் நடந்து கோண்டனர். சமூக ஊடகம் இல்லை, கவனச் சிதறல்களும் இல்லை.
அதாவது மூத்த வீரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஊடகங்களிடம் எப்படி பேசுகிறார்கள் போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவர்கள் இந்தியாவில் கிரிக்கெட்டின் தூதர்கள் ஆவார்கள்.
ஆனால் இப்போது அப்படியில்லை. இதைத்தான் உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். இந்தியாவுக்கு ஆடிய பிறகே நீங்கள் உங்கள் ஆளுமை குறித்து அக்கறையுடன் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது அணியில் நீ, விராட் கோலிதான் மூத்த வீரர்கள்.
மூத்த வீரர்களுக்கு மரியாதை என்ற விதத்தில் ஒரு சிலர் தான் உள்ளனர். மூத்த வீரர்கள், இளம் வீரர்களுக்கு இடையே ஒரு சிறிய கோடுதான் உள்ளது. யார் வேண்டுமானாலும் யாரிடமும் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற நிலை இப்போதைய இந்திய அணியில் உள்ளது.
விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, சமூக ஊடகம் எங்கள் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் மூத்த வீரர்கள் கடிந்து கொள்வார்கள் என்ற பயம் எங்களுக்கு இருக்கும்.
ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்கள் பற்றி மீடியாவில் கூறியது போன்ற நிகழ்வெல்லாம் என் காலத்தில் சாத்தியமே இல்லை. என் காலத்தில் அப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்காது” என்றார் யுவராஜ்.
ரோஹித் சர்மா தன் பங்குக்கு யுவராஜ் சிங்கை மறுக்காமல் ”நான் வரும்போதும் அணியில் நிறைய சீனியர்கள், நானும் பியூஷ் சாவ்லாவும்தான் இளம் வீரர்கள்., ரெய்னாவும்தான். இப்போது சூழல் கொஞ்சம் இளகி உள்ளது. நான் இளம் வீரர்களுடன் பேசுகிறேன்.
ரிஷப் பந்துடன் நிறைய பேசுகிறேன். அவரை நிறைய ஆய்வு செய்கிறார்கள், ஊடகமும் அவரைப்பற்றி எழுதுவதற்கு முன்னால் யோசிக்க வேண்டும். ஆனால் இந்தியாவுக்காக ஆடும்போது கவனம் இருக்கத்தான் செய்யும்.” என்றார்.
யுவராஜ் சிங் இப்போதைய இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை விட குறைந்த ஓவர் கிரிக்கெட்களையே அதிகம் விரும்புகின்றனர் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையான கிரிக்கெட் என்றும், இப்போது அணியில் இருக்கும் வீரர்கள் உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர்களில் ஆட வேண்டும் என்றும் இந்தியாவின் பலதரப்பட்ட பிட்ச்களில் ஆடுவது ஒரு தனி அனுபவம் என்றும் யுவராஜ் சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT